தூய்மைப்பணியாளர் பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் செய்த சிறப்பு – விவரம்

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா.தூய்மைப் பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தி.நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கேட்பாரற்று சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை அடங்கிய பையைக் கண்டதும் அவற்றை அருகில் இருந்த பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

நகைக்கு உரியவரிடம் அந்த நகையும் பத்திரமாகச் சேர்க்கப்பட்டது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்மாவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு ஒரு இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பத்மாவை தனது இல்லத்திற்கே அழைத்து அவரைப் பாராட்டியதுடன் தங்கச்சங்கிலி அணிவித்து அவரை சிறப்பித்தார்.

இந்தநிலையில் தற்போது, கடல் தாண்டி பணியாளர் பத்மாவின் நேர்மைக்கான கௌரவம் தேடி வந்துள்ளது

ஆம்.. மலேசிய சட்டத்துறை அமைச்சரான
மூ.குலசேகரன் தூய்மைப்பணியாளர் பத்மாவின் இந்த நேர்மையான செயல் குறித்து கேள்விப்பட்டு தனது உதவி அதிகாரியான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவம் செய்துள்ளார்.

அதிகாரி வடிவுக்கரசி பணியாளர் பத்மா பணி செய்யும் இடத்திற்கே நேரில் சென்று அவருக்கு மோதிரம் அணிவித்தார்.

இந்த நிகழ்வின் போது தூய்மைப்பணியாளர் பத்மாவுடன் மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர்
மு.குலசேகரன் வீடியோகாலில் பேசி, அவருக்கு தனது மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

உண்மைக்கும் நேர்மைக்கும் காலமில்லை குறுக்குவழியில் போனால்தான் முன்னேற முடியும் என்று பெரும்பாலானோர் சொல்லிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நேர்மையாக இருந்தால் எவ்வளவு நல்லது என்பதற்கு எடுத்துக்காட்டாக தூய்மைப் பணியாளர் பத்மா திகழ்கிறார்.

Leave a Response