நான் கூட்டணிக்குப் போயிருந்தால் சீட்டும் 40 கோடி பணமும் கொடுத்திருப்பார்கள் – சீமான் பேச்சு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:– தி.மு.க.வினர் மக்களுக்கு இலவசமாக டி.வி.யை கொடுத்தோம் என்கிறார்கள். அதே போல அ.தி.மு.க.வினர். விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கொடுத்தோம் என்கிறார்கள்.

மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவாசயத்திற்கு முக்கியத்துவம் கொண்டது வைகை அணை, அதேபோல ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த அணையை தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் தூர்வாரி கூடுதலாக தண்ணீர் தேக்கிட நடவடிக்கை எடுக்கவில்லை. இலவசங்களுக்கு பதிலாக பொதுமக்களுக்கு அணையை தூர்வார அனுமதி கொடுத்து இருந்தால் கூட, அவர்கள் தாமாக முன் வந்து, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உணர்வு பூர்வாகமாக தூர்வாரி அணையை பாதுகாத்து இருப்பார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க.விற்கு. தொலை நோக்கு சிந்தனைகள் இல்லை. மக்கள் பிச்சைக்காரர்களாக இருக்க வேண்டும். அப்பதான் அவர்கள் நம்மிடம் கையேந்துவார்கள், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி நாம் ஓட்டு பெறலாம் என்று கங்கனம் கட்டுகிறார்கள். இவர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மக்களின் உயிர் ஆதாரமான குடிநீரை இலவசமாக தந்தார்களா?. ஆனால் தேனாறு ஓடும், பாலாறு ஓடும் என்பார்கள். ஆட்சியில் இருந்த போது செய்யாதவர்கள இனி எப்படி செய்வார்கள்?.

நாம் தமிழர் கட்சி ஆட்சி செய்வதற்காக தேர்தலில் நிற்கவில்லை. மக்கள் நலமாக வாழ்வதற்காகத்தான் போட்டியிட்டு வாக்கு கேட்கிறோம். நான் யாருடனாவது கூட்டணி சேர்ந்து இருந்தால் சீட்டும், 40 கோடி பணமும் கொடுத்து இருப்பார்கள். தமிழக மக்களுக்காக, தாய்நாட்டுக்காக பாடுபடவேண்டும் அதுவே எனது லட்சியம்.

சிம்னி விளக்கு, அரிக்கேன் விளக்கு என்று எத்தனையோ விளக்குள் உள்ளன. ஆனால் தன்னை தானே உருக்கிக் கொண்டு வெளிச்சம் தரக்கூடியது மெழுகுவர்த்தி. அதே போல தமிழக மக்களுக்காகவும், மொழிக்காகவும் உழைத்து கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சின்னமான இரட்டை மெழுகுவர்த்திக்கு உங்களின் வாக்குகளை பதிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response