சிவகங்கை தவெக சமஉ 20 விழுக்காடு தரகு கேட்கிறார் – ஒப்பந்ததாரர்கள் பேட்டி

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்,நடப்பாண்டில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் (விபி ஜி ராம்ஜி) ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சுமார் 120 ஒப்பந்ததாரர்கள் பணிகளைச் செய்து வருகின்றனர்.

2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கான தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை.தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை விடுவிக்கவேண்டும்,நடப்பாண்டில் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்….

நடப்பாண்டில் ரூ.11 கோடி கிராமப்புற திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திட்டப்பணிகளை நியாயமாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவேண்டும்.ஆனால் பணிகளை மேற்கொள்வதற்கு சிவகங்கை எம்எல்ஏ குழந்தைராணி நாச்சியார் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்.கமிஷன் தரவில்லை எனில் தவெக கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே பணிகள் ஒதுக்கப்படும் எனக் கூறுகிறார்.எங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்.பணிகளை வழக்கமான நடைமுறைப்படி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசுப் பணிகளைச் செய்ய சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர்,ஒப்பந்ததாரர்களிடம் 20 விழுக்காடு தரகு கேட்டார் என வெளிப்படையான குற்றச்சாட்டு வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response