
தமிழ்நாடு முழுவதும் எஸ்ஐஆர் எனும் வாக்காள தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. நிலை அலுவலர்களிடம் வழங்கிய படிவங்கள் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. செயலியில் ஏற்றப்பட்ட வாக்காளர் பட்டியல்களில் இடம்பெயர்தல், இறந்தவர்கள் அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பாக முகவர்களிடம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதில் சிவகங்கை நகராட்சி 7 ஆவது வார்டில் வசிக்கும் நாதக சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா, இவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள், இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இருவருமே கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான படிவங்களை நிரப்பி வழங்கியுள்ளனர். தற்போது இறந்தவர்கள் பட்டியலில் பெயர் இடம் பெற்றதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவரும் புகார் அளிக்க வந்தனர். அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பொற்கொடி வந்தபோது அவரிடம், ‘‘எங்கள் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளது’’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆட்சியர், ‘‘இது நிர்வாகப் பிழை, விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நீக்கப்பட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்’’ என்றார்.
ஒரு கட்சி அறிவித்த வேட்பாளரே இறந்துவிட்டதாக தெரிவித்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீவிர திருத்தம் குறித்து சில வாரங்களுக்கு முன் கருத்து சொன்ன சீமான்,இது முறையாக நடக்கும் என்று நம்பிக்கையில்லை,எங்கள் வேட்பாளர்களின் பெயர்கள் கூட இருக்குமா? எனத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தார்.
அவர் சொன்னது போலவே இப்போது நடந்திருக்கிறது என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள்.


