
கோவை குனியமுத்தூர் பகுதியில் அமமுக மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதன்பின் அளித்த பேட்டியில் கூறியதாவது….
ஜெயலலிதா பிறந்தநாளில் அமமுக எந்தக் கூட்டணியில் இடம் பெறுவோம் என்பதை முடிவு செய்வோம். எடப்பாடி பழனிச்சாமியை தாண்டி எங்களுக்கு வேறு யார் மீதும் வருத்தம் இல்லை.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 53 ஆண்டு காலம் அதிமுகவில் இருந்தவர்.அதிமுக இணைப்பை ஏற்காதவர்கள் அவரைக் கட்சியிலிருந்து விலக்கினார்கள்.அந்தத் தவறுகளைச் செய்பவர்கள் திருத்துவதற்கு நாங்கள் ஒரு வழியில் முயற்சி செய்தால், அவர் ஒரு பாதையில் பயணிக்கிறார். அவர் கோபதாபத்தில் எடுத்த முடிவாகப் பார்க்கவில்லை. நிதானமாகச் சிந்தித்து முடிவெடுத்திருக்கிறார். செல்லூர் ராஜு எப்போதும் காமெடியாக பேசிக் கொண்டிருப்பவர். அதிமுக என்னும் ஆலமரத்தில் இருந்து இலைகள் உதிரவில்லை. செங்கோட்டையன் போன்ற விழுதுகள் விலகிச் செல்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதனால் அந்த விசயத்தில் அரசாங்கமும் சரி, நீதிமன்றங்களும் சரி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.எனவே எந்த ஒரு கட்சியும்,அமைப்பும்,மதத்தை, தெய்வத்தை,தெய்வத்தின் பெயரை கையில் எடுத்து அரசியல் செய்யாமல் இருப்பதே தேவையற்ற குழப்பங்களை உருவாக்காமல் இருக்கும்.
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறாரே?
அயோத்தியில் இராமர் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் உள்ளது. அப்படி இருக்கும்போது திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றமுடியாது. நயினார் நாகேந்திரன் அவர் வகிக்கும் பொறுப்பிற்காக அதைக் கூறி இருக்கலாம்.
அதிமுகவை பா.ஜ,க மிரட்டுகிறதா?
ஒரு சிலரின் சுயநலம், சுய இலாபம், பதவி ஆசைக்காக அம்மாவின் தொண்டர்களைப் பிரித்துவிட்டார்கள். தேர்தல் முடிவுகள் கொடுக்கின்ற பாடத்திற்குப் பிறகு தூங்கிக் கொண்டிருப்பவர்களும்,தூங்குவது போல் நடித்துக் கொண்டிருப்பவர்களும் எம்ஜிஆரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்சியை வழிநடத்த ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என பாஜக தலைவர்கள் 2021 தேர்தலிலும் முயற்சி செய்தார்கள். தற்போதும் முயற்சி செய்கிறார்கள். ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும்போது மத்தியஸ்தர் தேவை. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களை அழைத்து சுமுக முடிவெடுக்கப் பேசுவது மிரட்டுவதாகவோ, தலையீடு செய்வதாகவோ நான் கருதவில்லை. நட்பு ரீதியாகவே அணுகி பேசுகிறார்கள்.
தவெகவுடன் கூட்டணியா?
தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமமுக இடம்பெறும் கூட்டணி வலிமையானதாக வெற்றி பெறும் கூட்டணியாக அமையும். கூட்டணி தொடர்பாக எந்த கண்டிசனும் போடப்போவதில்லை. நட்பு ரீதியில் பேசுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


