சசிகலா ஓபிஎஸ் டிடிவி கூட்டமைப்பு – சுவரொட்டியால் பரபரப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை ‘பொருந்தா கூட்டணி’ என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் பாமஉ அன்வர் ராஜா, முன்னாள் சமஉ கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், சிவகங்கை நகர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அந்த சுவரொட்டியில், ஓ.பன்னீர்செல்வம்,சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு அதற்குக் கீழே, மேலே உள்ளவர்கள் தான் தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டத்தின் முகங்கள். 10.5 இட ஒதுக்கீடு சதிகாரர், எடப்பாடிக்கு உடந்தையாக இருக்கும் இன துரோகி நயினார் நாகேந்திரன். தப்புக் கணக்குப் போடும் எடப்பாடி அணி மற்றும் பிஜேபி கூட்டணியை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தப் பகுதிகளில் படுதோல்வி அடையச் செய்வோம்.

குறிப்பு: 2 செல்போன் வைத்திருக்கும் நயினார் நாகேந்திரனை முதல் செல்போன் தொழிலுக்கும், இரண்டாவது செல்போன் அரசியலுக்கும் பயன்படுத்தி வந்ததால் தான் அதிமுகவில் இருக்கும்போது ஜெயலலிதாவால், இவரிடம் இருந்த மாநில புரட்சித் தலைவி பேரவை செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இவண் – விகேஎஸ், ஓபிஎஸ், டிடிவி கூட்டமைப்பு, தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டம் என எழுதப்பட்டிருந்தது.

இந்த சுவரொட்டி சிவகங்கை நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த மாவட்டத்தில் அதிமுக பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Response