புழல் ஏரியில் கழிவுநீர் சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்து – வேல்முருகன் எச்சரிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா? புழல் ஏரியில் கழிவுநீரா? ஏன்?

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இன்று நேற்றல்ல.பல ஆண்டுகளாகவே மாசுபாட்டின் ஆபத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது.அதிகாரிகளின் ஆய்வுகள்,நீதிமன்ற நடவடிக்கைகள்,சுற்றுச்சூழல் எச்சரிக்கைகள் என அனைத்தும் இருந்தும்,அதன் அடிப்படைப் பிரச்சினைக்கு இன்னும் நிரந்தரத்தீர்வு காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

2017-ஆம் ஆண்டிலேயே புழல் ஏரியில் மருத்துவக்கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படுவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது.விசாரணையில் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது பதிவானதுடன்,ஒரு நிறுவனத்துக்கு ரூ.17.71 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுச்சூழல் இழப்பீடும் விதிக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டு நீதித்துறை ஆவணத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு அறிக்கை இன்னும் அதிர்ச்சியூட்டுகிறது.புழல் ஏரியில் சேகரிக்கப்பட்ட நீர்மாதிரியில் 100 மில்லிலிட்டருக்கு 93 என்ற அளவில் மலக்கழிவு கோலைபார்ம் பதிவாகியிருந்தது.அப்போது அருகிலுள்ள சடையங்குப்பம் பகுதியில் நிலவிய திறந்தவெளி மலம் கழிக்கும் நடைமுறையால் இந்த மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியது.

இப்போது 2026 பிப்ரவரியிலும் அதே புழல் ஏரியில் மீண்டும் மலக்கழிவு கோலைபார்ம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,வெங்கடேஷ்வரா நகர்,புதூர்,பானு நகர்,கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் வடிகால்கள் வழியாக ஏரியைச் சென்றடைவதாகவும்,சக்தி நகர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஏரிக்குள் விடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

2017 இல் புகார்.
2021 இல் மலக்கழிவு மாசுபாடு பதிவாகிறது.
2026 இல் மீண்டும் அதே எச்சரிக்கை.
அப்படியானால் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எங்கே போயின?

இது ஒரு சாதாரண ஏரி பாதுகாப்புப் பிரச்சினையல்ல.சென்னை மக்களின் குடிநீரின் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், வருங்காலத் தலைமுறையின் வாழ்வுரிமை ஆகியவற்றைத் தொடும் பிரச்சினை ஆகும்.

மலக்கழிவால் மாசுபட்ட நீர் மூலம் வயிற்றுப்போக்கு,காலரா,சீதபேதி,வயிற்றுக்குடல் தொற்றுகள்,டைபாய்டு, கல்லீரல் அழற்சி ‘ஏ’ உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.குறிப்பாக குழந்தைகள் கடுமையான வயிற்றுப்போக்கால் நீரிழப்பு உள்ளிட்ட ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடும்.

இன்று ஏரியில் கண்டறியப்பட்ட மாசுபாடு,நாளை மக்களின் உடல்நலப் பேராபத்தாக மாறிவிடக்கூடாது.
ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே குடிநீராக வழங்கப்படுகிறது என்பதால்,தற்போதே சென்னை மக்களின் குடிநீரில் நோய் பரவுகிறது என்று கூறவில்லை.ஆனால்,குடிநீரின் மூலஆதாரத்திலேயே மலக்கழிவு மாசுபாடு தொடர்ந்து கண்டறியப்படுவது மிகத்தீவிரமான எச்சரிக்கை ஆகும்.

மேலும்,ஒருபுறம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் ஏரியைச் சென்றடைவதாகத் தெரிவிக்கிறது.மறுபுறம் சென்னை குடிநீர் வாரியம் அதனை மறுக்கிறது.இந்த முரண்பாட்டில் சிக்கித்தவிப்பது அதிகாரிகள் அல்ல.சென்னை மக்கள்.

எனவே,
புழல் ஏரிக்குள் கழிவுநீர் செல்லும் ஒவ்வொரு வழித்தடத்தையும் உடனடியாகக் கண்டறிந்து நிரந்தரமாகத் தடுக்கவேண்டும்.
பாதாளச் சாக்கடை வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளுக்கும் உடனடியாக இணைப்பு வழங்கவேண்டும்.
புழல் ஏரியின் நீரைத் தொடர்ந்து அறிவியல் முறையில் பரிசோதித்து,அதன் முழுமையான முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாக வெளியிடவேண்டும்.
2017 முதல் இதுவரை ஏரியைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?,செலவிடப்பட்ட நிதி எவ்வளவு?, நிறைவேற்றப்படாத பணிகள் எவை? என்பதைத் தமிழகஅரசு வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும்.ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கழிவுநீர் வெளியேற்றங்களையும் கண்டறிந்து உடனடியாகத் தடுக்கவேண்டும்.புழல் ஏரியைச் சுற்றி நிரந்தரக் கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தி,கழிவுநீர் கலக்கும் இடங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக எச்சரிக்கைகள் எழுந்தும் புழல் ஏரி இன்னும் பாதுகாப்பாகவில்லை என்றால்,இதற்கு யார் பொறுப்பு?
சென்னையின் உயிர்நாடியான புழல் ஏரியைக் கழிவுநீர் கால்வாயாக மாற்ற அனுமதிக்கமுடியாது.
மக்களுக்கு நோய் வந்த பிறகு தீர்வு காண்பது சரியல்ல.வருமுன் காப்பதே சரியாகும்.

எனவே,புழல் ஏரியைப் பாதுகாக்கத் தமிழகஅரசு இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response