
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஸ்வர் தயாள், சென்னை காவல்ஆணையர் அருண் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் கூறியதாவது……
கடந்த 5 ஆண்டுக்கணக்கை எடுத்துப் பார்த்தபோது,எல்லா குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.2021 இல் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2024 இல் 490 வழக்குகள், 2025 இல் 461 வழக்குகளாகக் குறைந்துள்ளது. பலாத்காரம் வழக்குகள், 2021 இல் 422. 2025 இல் 401 வழக்குகள் பதிவாகியுள்ளன.அஜித்குமார் வழக்கில் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம்.இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு முக்கியக் காரணம் மக்கள் வேறு பிரிவு விசாரணை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மையை மக்கள் நம்புவதற்காக இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைத்தோம். தற்போது சிவகங்கையில் நடந்த 2 ஆவது சம்பவம் சிபிசிஐடி விசாரணையில் உள்ளது.
பாலியல் தொடர்பான வழக்கு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்துக் குற்றங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.போதைப் பொருட்கள் பொறுத்தமட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2021 இல் 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.தற்போது நாம் எடுத்த கடுமையான நடவடிக்கை மற்றும் எங்கெங்கே விற்பனை செய்யப்படுகிறது என்று கண்காணித்து எடுத்த நடவடிக்கையால் 11 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்துள்ளோம். வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நாங்கள் எந்த அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று உங்களுக்குத் தெரியும்.நாங்கள் போதைப் பொருளுக்கு எதிராக ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு செய்து உள்ளோம்.இதற்காக உள்துறை அலுவலகத்தில் ஒரு பிரிவே இயங்கி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 25 அரசு மருத்துவமனைகளில் போதைப் பொருள் மறுவாழ்வு மையம் தொடங்கி உள்ளோம். காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுகாதாரத்துறை என அனைத்துத் துறைகளுடன் இணைந்து போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் போதைப் பொருட்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை நாடுமுழுவதிலும் எடுத்த நடவடிக்கையில் தமிழ்நாடு சிறப்பாக எடுத்துள்ளது என்று சொல்லலாம்.
தமிழ்நாடு அரசு ஒரு நிரந்தர டிஜிபியை நியமனம் செய்வதற்கு, நாம் யுபிஎஸ்சிக்கு ஒரு பட்டியல் அனுப்பி இருக்கோம்.அந்தப் பட்டியலின்படி,யுபிஎஸ்சி ஒரு கமிட்டி கூட்டும்,அதன்பிறகு நாம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் பேசினார்.
டிஜிபி வெங்கடராமன் பேசியதாவது….
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் படிப்படியாகக் குறைந்துள்ளன. காவல்துறையைப் பொறுத்தவரை சிறிய குற்றங்கள் என்றாலும் பெரிய குற்றங்கள் என்றாலும் குற்றங்களை தீவிரமாக கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் மக்களிடம் நாங்கள் எந்தக் குற்றங்கள் நடந்தாலும் உடனே புகார் அளிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். போக்சோ வழக்கு என்பது சமீபத்தில் வந்த சட்டம்தான். 2012-13 ஆம் ஆண்டுகளில் அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சட்டம்தான்.அதுபற்றி முதலில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.
அது குறித்து காவல்துறை மட்டும் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறை,சமூக நலத்துறை,ஆதிதிராவிட நலத்துறை என அனைத்துத் துறைகளும் போக்சோ குறித்து விழிப்புணர்வு செய்து புகார் அளிக்கும்படி கூறுகிறோம்.அதன் பயனாக பள்ளியில் ஒரு ஆசிரியர் குழந்தையை தவறு தொடுதலில் ஈடுபட்டால் அதுபற்றி தற்போது புகார் அளிக்கிறார்கள். இந்தநிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை.அதனால் போக்சோ வழக்குகளிலேயே சில குற்றங்கள் நடக்கிறது.அதேபோல் எஸ்சி-எஸ்டி வழக்குகள் குறித்து அதிகமாக விழிப்புணர்வு செய்து வருகிறோம்.குறிப்பாக சாதிப் பெயர் சொன்னாலே உடனடியாக நாங்கள் எப்ஐஆர் போடுகிறோம்.
அடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது,காயங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.போக்சோ மற்றும் எஸ்சி-எஸ்டி வழக்குகளில் அதிகமாக காவல்துறை மற்ற துறைகளுடன் சேர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்துள்ளோம்.அதனால் தற்போது அதிக புகார்கள் வருகின்றன.அந்த புகார்களை நாங்கள் உடனடியாகப் பதிவு செய்யச் சொல்கிறோம். முன்புபோல் புகார் நிலையிலேயே வைப்பது,போன்ற நிலை இல்லாமல் எதுவாக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.இதனால்தான் தற்போது அதிக வழக்குகள் போக்சோ மற்றும் எஸ்சி-எஸ்டி வழக்குகள் பதிவாகின்றன.
நம் சமுதாயத்தை நாம் எதிர்மறையாகப் பார்த்தோம் என்று சொன்னால் மக்களுக்கு இதை வெளியில் சொல்ல ஒரு தயக்கம் வரும்.சமுதாயத்தில் மக்கள் நாம் ஏதோ கீழே சென்றுவிட்டதாக நினைக்கக்கூடாது.அது அப்படி கிடையாது.போக்சோ குற்றங்கள் நடந்தால் புகார் வரவேண்டும்.எல்லாக் குற்றகளையும் தீர்க்கத்தான் நாங்கள் இருக்கிறோம்.சமீபத்தில் நடந்த குற்றங்களில் கூட 2 வழக்குகளில் தற்போது விசாரணை நடந்துவருகிறது.பாக்கி எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்து இருக்கிறோம்.அதனால் தமிழ்நாடு காவல்துறையைப் பொறுத்தமட்டில்,மக்களுக்கு எந்தக் குற்றங்கள் நடந்தாலும் அது தீவிரக் குற்றங்கள்தான்.
அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.நடவடிக்கை எடுப்போம்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நிலையை நாம் அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.அதேநேரம் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகமாக புகார்கள் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறோம்.அதை நாம் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து மக்கள் புகார் அளிக்காத வகையில் குறைக்கக்கூடாது.தூத்துக்குடி விளாத்திகுளம் வழக்கு,போக்சோ வழக்கில் வருவதால் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருக்காங்க.இன்ஸ்பெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்தான்,அவரை நாங்கள் சஸ்பெண்ட் செய்து இருக்கிறோம்.காவல்துறையைப் பொறுத்தமட்டில் எதுவாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
அதில்,இதில் தவறினால் சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.தற்போது விசாரணையில் உள்ளது,தற்போதுதான் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கோம்.பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்போம்.அது தனி இடம்,வெளியாட்கள் செய்திருக்க முடியாது,இருந்தாலும் அது விசாரணையில்தான் முடிவு செய்யமுடியும்.தற்போது விசாரணையில் உள்ளதால் அதுபற்றி தற்போது கூறமுடியாது.நாங்குநேரியைப் பொறுத்தமட்டில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம்.
ஆனால் மக்கள் அதுதொடர்பாக பார்க்கும் கண்னோட்டம் மற்றும் காவல்துறை பார்க்கும் கண்ணோட்டம் என்பது, விசாரணையை அடிப்படையாக வைத்துதான் முடிவு செய்யமுடியும்.எங்களைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது கொலை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் குறைந்து இருக்கு. குறிப்பாக சாதியக் கொலைகள் என்பது ஒரு வியூகம் இருக்கலாம்.ஒவ்வொரு கொலைக்கும் ஒரு காரணம் இருக்கும்.நாம் கொலைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.ரீல்ஸ் போடும் குற்றவாளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டிஜிபி வெங்கட்ராமன் கூறினார்.


