
ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையானது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.
இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்னை அறிவாலயத்தில் நேற்று கையெழுத்திட்டனர்.
அதன்படி மதிமுகவுக்கு மொத்தம் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3-ல் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்திலும் மதிமுக களமிறங்குகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் வைகோ.
அவர் கூறியவதாவது…
உடன்பாடு கையெழுத்தாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியின் பதிவைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரிடம், நான் எப்படி உங்களுக்கு உறுதுணையாக இருந்தேனோ, அதுபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறினேன்.
திமுகவுக்கு உறுதுணையாக இருப்பது, எப்படியாவது மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என நினைப்பதைத் தடுப்பது ஆகும். அந்தவகையில் திமுகவுக்கு அரணாக இருக்கும் வகையில் உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது மகிழ்ச்சி.
பிரதமர் மோடி 2029 ஆம் ஆண்டில் அந்தப்பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்றார்.
2021 தேர்தலில் இதே கூட்டணியில் இணைந்து 6 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.அப்போது எல்லோரும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.


