
திண்டிவனத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சசிகலா பேசுகையில்….
இந்நேரத்தில் ஒரு குட்டிக்கதை என் நினைவுக்கு வருகிறது. அதாவது, கரை சேர நினைத்த மனிதர்களின் கதை இது.ஒரு ஊர்ல ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இக்கரையில ரெண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அக்கரைக்குச் செல்வதற்கு ஓடமும் இல்லை.இந்தநேரத்தில் ஒரு காளைமாடு அங்கே வந்தது.அது ஆற்றில் பாய்ந்து நீந்த ஆரம்பித்தது.இதைப்பார்த்த ஒருத்தர் ஆற்றில் குதித்து,அந்தக் காளை மாட்டின் வாலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.காளைமாடு சுலபமாக அவரை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
அடுத்தவர் பார்த்தார்,நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று? அப்போது ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவரும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு சென்றார்.
கனமான மனிதனை இழுத்துக்கொண்டு நாயால் நீந்த முடியவில்லை, திணறியது.அவர்கள் போகவேண்டிய திசை வேறு, போய்க்கொண்டிருந்த திசை வேறு.
இதில் மூன்றாவதாக ஒரு ரகம் இருக்கிறது. ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான்.நீண்டநேரம் ஆகியும் அவன் கரை திரும்பவில்லை.கரையில் இருப்பவர்கள் கத்துகிறார்கள்,அதை விட்டுவிடு என்று,அவன் நடு ஆற்றில் இருந்து கத்துகிறான்,நான் இதை எப்பவோ விட்டுட்டேன்,இப்ப இது (கரடி) என்னை விடமாட்டேங்குது என்று. எனவே தவறாக பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். நீங்கள் எல்லாம் இந்தக் காளையின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள், கண்டிப்பாகக் கரை சேர்ந்து விடுவீர்கள்.
எத்தகைய சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நமது தொண்டர்கள் ஆதரவோடு தமிழ்நாட்டு மக்களின் நலன் காப்போம். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் வரும் சட்டசபைத் தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுத்து வெற்றிவாகை சூடுவோம். இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகள்
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கதையில்,தன்னைக் காளை மாடு என்றும், கரடி பாஜக என்றும், அதைப் பிடித்திருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் சசிகலா சொல்லியிருக்கிறார் என அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கூறுகின்றனர்.


