
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் அரசியல் மாநாடு மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியை ஏற்றி வைத்துப் பேசியதாவது….
இதுவரை புதுச்சேரி, தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கோட்பாடு,நிலைப்பாட்டில் முற்றிலுமாக எங்கள் கட்சியின் தத்துவமும்,கோட்பாடும் மாறுகிறது.இவர்கள் ஊழல்,இலஞ்சம்.நாங்கள் உண்மை,நேர்மை.
நாங்கள் மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவோம்.அவர்கள் ஓட்டைப் பற்றியே கவலைப்படுவார்கள், நாங்கள் நாட்டைப் பற்றிக் கவலைப்படுவோம்.
எல்லாவற்றுக்கும் இலவசம் அறிவிக்கிறார்கள்.இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல.அது வீழ்ச்சித் திட்டம். கவர்ச்சித் திட்டம்.இலவசம் பெறவேண்டிய ஏழ்மை,வறுமை இல்லாமல் எமது மக்களை உயர்த்தவேண்டும் என்பது எமது கடமை.
படித்தவர்,படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை.படிக்காதவரே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இலக்கு.ஆணும், பெண்ணும் சமம்.இந்தியக் கட்சிகளின் மும்மொழிக்கொள்கை மோசடிக் கொள்கை.இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை.கொள்கை மொழி தமிழ்.தமிழ் பயிற்றுமொழி.ஆங்கிலம் பாடமொழி.
பயன்பாட்டு,தொடர்பு மொழி.இதுதான் எங்கள் கோட்பாடு.
இதுவரை இந்த மாநிலத்தில் இருந்த அரசியல் அடித்தளத்தை நாம் தமிழர் கட்சியின் கோட்பாடும், தத்துவமும் தகர்க்கிறது.ஆள்மாற்றம்,ஆட்சி மாற்றம் தொடர்ந்து நடக்கிறது.விடுதலை பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆள் மாற்றம்,ஆட்சி மாற்றம் தொடர்கிறது.ஆள் மாற்றம்,ஆட்சி மாற்றம் அல்ல.அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே எங்கள் கோட்பாடு.
இவ்வாறு சீமான் பேசினார்.
நேற்று சென்னையில் மகளிர்நாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்,
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையாக வெறும் ரூ.1000 மட்டுமே கொடுக்கப்படுகிறது.அதைவைத்து மளிகை சாமான் கூட வாங்கமுடியவில்லை.எனவே 60 வயது வரையுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதாமாதம் ரூ.2500 வழங்கப்படும்.இதில்,மாநில,மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதி விலக்கு.அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அண்ணன் சீர் திட்டம் மூலம் பெண்களின் திருமணத்துக்குத் தரமான பட்டுப் புடவையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும். காமராஜர் கல்வி உறுதித் திட்டத்தின் வாயிலாக மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை கொடுப்போம்.
வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் அரசுப்போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் திட்டத்தின் கீழ் ராணி வேலுநாச்சியார் படை ஏற்படுத்தப்படும்.இத்திட்டத்தின் கீழ் சாதாரண உடையில் கேமராக்களுடன் பெண்கள் பாதுகாப்புப்பணியில் இருப்பார்கள்.
ரேசன் கடைகள்,பள்ளி-கல்லூரிகளில் இலவச நாப்கின்கள் வழங்கப்படும்.சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும்.கூடவே மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 இலட்சம் வரையில் வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படும்.சுய உதவிக்குழுக்களில் பதிவு செய்து குறு, சிறு நிறுவனங்களாக மாறுவோருக்கு ஆண்டுக்கு ரூ. 5 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரமும்,பேபி வெல்கம் கிட்டும் வழங்கப்படும்.இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கின்றன.அதையெல்லாம் வரும் நாட்களில் நான் அறிவிப்பேன்.
இவ்வாறு அடுக்கடுக்காக இலவசங்களை அறிவித்தார் நடிகர் விஜய்.
மாலையில் சீமான் இதற்கு நேரெதிராகப் பேசியிருக்கிறார்.
சீமான் பேசியதுதான் சரி என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைக் காணமுடிகிறது.


