
முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முக்கியத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்,இன்று திமுகவில் இணைந்தார். 75 வயதான ஓபிஎஸ், 1973 முதல் அதிமுகவில் இருந்தவர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.
அவர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அவருடன் அவரது மகனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்…
பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் தளபதி மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.
அரசியலில் சர்வாதிகாரமாக ஆணவப் போக்கோடு நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, எந்தக் காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது எனும் சூழலை அதிமுகவுக்கு உருவாக்கியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். ஓர் அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு தளபதி கட்சியை வழிநடத்துகிறார்.
தளபதி, கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது. அடித்தட்டு, ஏழை எளியவர்கள், பெண்கள் மன மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியில் உள்ளனர். அண்ணா எப்படி அனைத்து கட்சிகளையும் தாயுள்ளத்தோடு சட்டப்பேரவையில் அணுகினாரோ, அதே பாணியில் தளபதியும் செயல்படுகிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்குத் தலைமைப் பண்பு இல்லை. தென் மாவட்டங்களின் எந்தவொரு தலைவரும் வளர்ந்துவிடக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். அவ்வாறு அதிமுகவில் தென் மாவட்டங்களில் வளரும் தலைவர்களை பழனிச்சாமி அழித்து வருகிறார். பழனிச்சாமியால் அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது.
கடந்த காலங்களில் அதிமுகவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டேன். அனைவரையும் அரவணைக்கும் போக்கு இப்போது அதிமுகவில் இல்லை. அதனால், எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தளபதி வாய்ப்புக் கொடுத்தால் போட்டியிடுவேன்.
வரும் தேர்தலில் திமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, சிறப்பான ஆட்சியை தளபதி நடத்தி வருகிறார். மீண்டும் திமுக ஆட்சியே தமிழ்நாட்டில் அமையும். நான் சரியான முடிவை எடுத்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். திமுக தீயசக்தி என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


