சசிகலா கட்சியில் இணைகிறார் நடிகர் பிரபு?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு சொந்தக் கட்சியினர் செய்த சூழ்ச்சி காரணமாக அமைதியாக இருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரு தேர்தல்களிலும் அமைதியாக ஒதுங்கியிருந்தார்.

விரைவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்.

ஆனால்,அவருடைய எல்லா முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இதனால், அதிமுகவினர் திமுக,தவெக என மாற்றுக் கட்சிகளை நோக்கி அணிவகுக்கத் தொடங்கினர்.

இதனால், இதுவரை பொறுத்தது போதும் என்கிற முடிவை எடுத்த சசிகலா, தனியாகக் கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

அதை முறையாகச் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார்.

பிப்ரவரி 24 ஆம் தேதி கட்சிக் கொடியை அறிமுகம் செய்த சசிகலா, விரைவில் கட்சிப் பெயரை அறிவிக்கவிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

அதன்பின்,தொடர்ந்து ஆதரவாளர்களைச் சந்தித்து கட்சியைக் கட்டமைக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.

அவருக்கு முன்னாள் ஆட்சிப்பணி, காவல்பணி அதிகாரிகள் துணையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் சசிகலாவை நடிகர் பிரபு சந்தித்து நீண்டநேரம் பேசியிருக்கிறார்.சசிகலா, பிரபு ஆகியோர் உறவினர்கள் எனறாலும் இதுவரை அரசியலில் நேரடியாக ஈடுபட்டதில்லை.

இப்போது சசிகலா கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அக்கட்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுக்க பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று நடிகர் பிரபுவை அவர்களுடைய உறவினர் சிலர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.

அதன்காரணமாகவே, சசிகலாவை நடிகர் பிரபு சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

அந்தச் சந்திப்பின்போது, கட்சியில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டாரா? அல்லது எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது,என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்வதற்காகச் சந்தித்தாரா? எனும் விவரம் வெளியாகவில்லை.

அதேநேரம், சந்திப்பு நடந்திருக்கிறது என்பதால் நடிகர் பிரபு,சசிகலா தொடங்கும் கட்சியில் இணையப்போகிறார் என்கிற தகவல் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

Leave a Response