எடப்பாடிக்கு எதிர்ப்பு செங்கோட்டையனுக்கு ஆதரவு – டிடிவி.தினகரன் அதிரடி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

அண்ணாமலை என்னைச் சந்தித்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அதனால் கூட்டணியில் இருந்து வெளியில் வந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை. 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது, எனக்கு துரோகம் செய்த பழனிச்சாமி என்னைச் சந்திக்க எவ்வாறு அவருக்கு தைரியம் வரும், தயக்கம் இருக்கும். அதிமுகவின் பொதுச்செயலாளராக அவர் இருக்கும் வரை எங்களுடன் கூட்டணிக்கு வர வாய்ப்பு இல்லை.

எங்கள் நலம் விரும்பிகள் மற்றும் டெல்லியில் இருக்கும் சிலர் அம்மா கட்சி மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் வர வேண்டும் எனத் தெரிவித்தார்கள். எனக்குத் தெரியும் இது நடக்காது என்று. இருப்பினும் முயற்சி செய்யுங்கள் என்று சொன்னேன். பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என்றால் அந்தக் கூட்டணியில் இருக்கமாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளேன்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை என்று கூறுவார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி என்னும் துரோகியை என்றும் நண்பராக ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் திமுகவிற்கு வைகோ செல்கிறார் அது போல அமமுக செல்லும் என சிலர் கூறுகிறார்கள் எங்களால் பதவிக்கு வந்தவர், எங்களால் ஆட்சிக்கு வந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எங்களால் காப்பாற்றப்பட்ட ஆட்சி. அந்த ஆட்சியில் முதல்வர் ஆக்கப்பட்டவர் எங்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றிய நிகழ்வுக்கும், மதிமுக வைகோவின் நிகழ்வுக்கும் பொருந்தாது.

18 உறுப்பினர்கள் இல்லை என்றால் ஆட்சி அமைத்து இருக்க முடியுமா? ஓ பன்னீர் செல்வம் உடன் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிராக இருந்தபோது இந்த 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு செலுத்தாமல் இருந்து இருந்தால் ஆட்சி அமைத்து இருக்க முடியுமா? அதிமுக என்ற ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது. ஆனால் எடப்பாடி நன்றி இல்லாதவர், ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்த எங்களுக்கு அவர் துரோகம் செய்து விட்டார்.

நயினார் நாகேந்திரன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அமித்ஷா சொல்லாததை நயினார் நாகேந்திரன் சொல்லிகொண்டு இருக்கிறார். தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவு தான் இறுதியானது எனச் சொல்கிறார். அவர் எடுக்கும் முடிவை எல்லாமல் கேட்டுகொண்டு இருக்கவேண்டும் என எங்களுக்கு தலை எழுத்தா?

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக தற்போது இல்லை. அதில் பல்வேறு விதிமுறைகள் இருந்தது. அதை அனைத்தையும் எடப்பாடி பழனிச்சாமி மாற்றி விட்டார். தற்போது இருப்பது எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம் தான். 2026 தேர்தலுக்குப் பின் மீண்டும் அதிமுக புத்துயிர் பெற பழைய சட்டத்திட்டத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றிய சட்டத்திட்டங்களைக் கொண்டு வந்து பழைய அதிமுகவை உருவாக்குவதற்கு அமமுக உறுதியாக துணை நிற்கும். 2026 ஆம் தேர்தலில் அமமுக இடம் பெற்று இருக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அப்போதுதான் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும் என அதிமுக மூத்ததலைவர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவரது அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளையும், அதேபோன்று அவரது ஆதரவாளர்களான முன்னாள் பாமஉ சத்தியபாமா உள்ளிட்ட 13 பேரின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடி பழனிச்சாமி பறித்தார்.

இந்நிலையில், அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு நேற்று மதியம் சென்ற செங்கோட்டையன், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என்று திட்டவட்டமாக டிடிவி.தினகரன் தெரிவித்த வேளையில் அவரை செங்கோட்டையன் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Leave a Response