
ஈரோடு அருகே பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் தனித்திறன் மேம்பாட்டு மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் உ.சகாயம் பேசியதாவது:
உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி. இன்றும் உயிர்த்துடிப்பாக இலக்கண, இலக்கிய வளம் மிக்க இம்மொழியை இளைஞர்கள் நேசிக்க வேண்டும். ஆங்கில மோகம் கூடாது. ஆங்கில ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகள்தான் ஏழை மாணவ, மாணவிகளின் கடைசி நம்பிக்கை. தமிழை முழுமையாக பாதுகாப்பது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்தான். எனவேதான், நான் ஆட்சியராக இருந்தபோது அரசுப் பள்ளிகளின் மீது அதிக கவனம் செலுத்தினேன். ஆங்கிலம் தெரியவில்லையே என மாணவ, மாணவிகள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆங்கிலத்தை எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். தமிழில் ஆங்கிலம் கலந்து தயவு செய்து பேச வேண்டாம்.
இன்றைய இளைஞர்கள் சமுதாயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எதையும் துணிந்து சந்திக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாய்ப்பு ஒருமுறை தான் வரும். அதை மிகச்சரியாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஊழல், லஞ்சம் தேசத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. லஞ்சம் இல்லாத நேர்மையான தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் வி.கே.முத்துசாமி, முதல்வர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


