எல்லோரும் என்னைப் பாராட்டினர் – ஆளுநரைப் புறக்கணித்த மாணவி மகிழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்தார்.மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் வரிசையாக வந்து ஆளுநரிடம் பட்டம் பெற்றனர். அப்போது, நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெறாமல் அவரைப் புறக்கணித்து விட்டு அடுத்து இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டம் பெற்றார். இந்நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஜீன் ஜோசப் மைக்ரோ பைனான்ஸ் பிரிவில் பிஎச்டி முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாணவி ஜீன் ஜோசப் கூறியதாவது…

நான் நாகர்கோவில் எஸ்டி இந்துக் கல்லூரியில் பிகாம் படித்தேன். பின்னர், சிவகாசி மெப்கோ கல்லூரியில் எம்பிஏ முடித்தேன். தற்போது நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் பிஎச்டி முடித்துள்ளேன். அதற்கான பிஎச்டி பட்டம் பெறுவதற்காக வந்தேன். தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகச் செயல்படும் ஆளுநரிடம் பட்டம் பெற நான் விரும்பவில்லை. தமிழ்நாட்டிற்காக அவர் என்ன செய்தார். அவர் எதுவும் செய்யவில்லை. அதனால், அவர் கையால் பட்டம் பெற விரும்பவில்லை. எனவே, அவரைப் புறக்கணித்து விட்டு துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டம் பெற்றேன்.

நான் திராவிட மாடலை பின்பற்றுகிறேன். முதலமைச்சர் இருக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் இருக்கிறார். இதற்காக, ஒரு சிஸ்டம் உள்ளது. இது நான் சுயமாக, தைரியமாக எடுத்த முடிவு. நான் துணைவேந்தரிடம் பட்டம் பெற்று எனது இருக்கைக்கு வந்தவுடன் சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் எனது தைரியத்தைப் பாராட்டினர். எங்களுக்கும் அந்த எண்ணம் இருந்தது என்றனர். அப்போது தான் இதுபோன்ற உணர்வு எல்லோரிடமும் உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response