தமிழீழ ஏதிலிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் இரண்டாவது கூட்டம், சனவரி 30 – 31 ஆகிய நாட்களில், மதுரையில் நடைபெற்றது. மதுரை சர்வேயர் காலனியில், முத்துக்குமார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, பழ.இராசேந்திரன், குழ.பால்ராசு, மதுரை அ.ஆனந்தன், மதுரை செ.இராசு, ஓசூர் கோ.மாரிமுத்து, பெண்ணாடம் க.முருகன், சென்னை க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மதுரை மேரி, பரமக்குடி இளங்கோவன், நெல்லை க.பாண்டியன், தூத்துக்குடி மு.தமிழ்மணி, திருச்சி மூ.த.கவித்துவன், எழுத்தாளர் இராசாரகுநாதன், சிதம்பரம் கு.சிவப்பிரகாசம், பழ.நல்.ஆறுமுகம், கோவை இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன

1. காவிரியைத் தடுக்க அணை கட்டப்படும் மேகேத்தாட்டுக்குச் சென்று முற்றுகைப் போராட்டம்

2. தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டு மாதங்களுக்குள் தமிழை அலுவல் மொழியாக ஆக்கிட வேண்டும். இல்லையேல் மக்கள் திரள் போராட்டம்!

3. தஞ்சையிலுள்ள தழல் ஈகி முத்துக்குமார் சிலையை அகற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்!

4. சல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட வேண்டும் – மக்கள் திருவிழாவாக சல்லிக்கட்டை நடத்த முன் வர வேண்டும்!

5. தமிழீழ ஏதிலிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்

தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் ஏற்பாட்டில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. ஏதிலியர் முகாம்களில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு விரும்புவோர் விண்ணப்பத்தை நிரப்பித் தருமாறு கோரியுள்ளனர். இதனைப் பொதுவாகப் பார்த்தால் விரும்புவோர் இலங்கைக்குத் திரும்பலாம் தானே என்று தோன்றும். ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே அங்கு வாழும் மக்களே, குடியியல் உரிமையற்று இராணுவ முகாம்களுக்கிடையே பணயக் கைதிகள் போல் உள்ளனர்.

வடக்கு கிழக்கு மாநிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, சிங்கள இராணுவம் வன்கவர்தல் செய்துள்ள தமிழர் நிலங்களை மீட்டுவிட்டு, பெருகிவரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து விட்டு, தமிழர்கள் வாழ்வதற்கான வாழ்வுரிமைகளை உறுதிப்படுத்திவிட்டு, இந்திய அரசு ஈழ ஏதிலியரை விரும்பினால் இலங்கை செல்லுங்கள் என்று கூறினால், அதில் பொருள் இருக்கும்; பொறுப்புணர்வு இருக்கும். ஆனால், கழற்றிவிட்டால் சரி என்று எண்ணத்தில் ஈழத்தமிழர்களை வெளியேறும்படித் தூண்டக் கூடாது. பல வெளிநாடுகள் அங்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளன. உடனடியாகத் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்.அடுத்து, வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன், குடியியில் வாழ்வுரிமையுடன் வாழும் நிலையை உருவாக்கிவிட்டு விரும்புவோர் இலங்கை செல்லலாம் என்று இந்திய அரசு அறிவிக்கலாம். விருப்பப்படிதான் இலங்கை திரும்புகிறார்கள் என்பதாக வெளியில் சொல்லிவிட்டு, வெளியேறுவதற்கான மறைமுக நெருக்குதல்களை ஈழத்தமிழர்களுக்கு அரசு கொடுக்கக் கூடாது என தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு, இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

6. நியூட்ரினோ ஆய்வகம் நிறுவுவதைக் கைவிடுக!

7. செண்பகவல்லி அணையை கேரள அரசு கட்டிக் கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Leave a Response