
திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பாரூக் படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி மே 17 இயக்கம் திருமுருகன் எழுதிய பதிவு….
தோழர்.ஃபாரூக்கின் இரண்டு சிறு குழந்தைகளுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார் உன் ’உன்னத கடவுள்’?
அந்தக் குழந்தைகளின் தகப்பனை காக்க வராத கடவுளா இந்த மனித சமூகத்தை காக்கப் போகிறார்?
இரு குழந்தைகளின் தகப்பனை கொல்லாதே என்று அறிவுரை சொல்லாத கடவுளை எப்படி கடவுள் என்று சொல்வீர்கள்?
அக்குழந்தைகளுக்கு கதை சொல்லவும், கைபிடித்து பள்ளி அழைத்து செல்லவும், சோறூட்டவும், செல்லமாய் கொஞ்சி விளையாடவும் செய்யும் தகப்பனை கொலை செய்யும் மிருக சிந்தனையை ’குற்றம்’ என்று சொல்லவில்லையா உன் கடவுள்?
மதவெறியை எதிர்த்த எங்கள் போராட்டம் என்பது அனைத்து மதவெறிக்குமானது.
ஆர்.எஸ்.எஸ்சின் மதவெறிக்கும்- இதற்கும் என்ன வேறுபாடு.
கடவுள் உண்டு என்றவன் மசூதியை உடைத்தான். கடவுள் இல்லையென்றவன் உடைத்த மசூதிக்காய் குரல் கொடுத்தான்.
கடவுள் உண்டு என்றவன் சகமனிதனை கோவிலுக்கு வெளியே நிறுத்தினான். கடவுள் இல்லையென்றவன் கோவிலில் அனைவருக்கும் கும்பிடும் உரிமைக்காய் போராடினான் .
கடவுள் மறுத்தவன் மனிதனின் விடுதலைக்கு எதிரானவர்களை எதிர்த்துப் போராடினான்.
ஈழத்தில் தமிழனை காக்க கடவுள் வரவில்லை. குஜராத்தில் இசுலாமியனை காக்க கடவுள் வரவில்லை. திபெத்திய பெளத்தனை காக்க கடவுள் வரவில்லை. ஈராக்கில் யெஜீதியை காக்க கடவுள் வரவில்லை. பாலஸ்தீனில், காசிமீரில் கடவுளை காணவில்லை.
உன் மதம் உன் மக்களை காக்கவில்லை. உன் கடவுள் உன் எதிரியை வேட்டையாடவில்லை.
இந்துத்துவ மதவெறியிடமிருந்து விடுதலை பெறும் வழிமுறை முற்போக்கு கருத்தியலில் மட்டுமே உண்டு. இந்துத்துவ மதவெறிக்கான மாற்று இசுலாமிய மதவெறியல்ல.
மதம் அதிகாரத்தை ஆக்கிரமிக்கும் பொழுதெல்லாம் வெறியாட்டங்கள் நடந்தே இருக்கின்றன. இதில் இந்து, முஸ்லீம், கிருத்துவம், பெளத்தம், யூதம் என்கிற வேறுபாடுகள் உலகில் இல்லை. இந்த மதங்கள் பெரும்பான்மை கொண்டு நின்ற இடங்களிலெல்லாம் மக்களை பலியிட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ், ஐ.எஸ்.ஐ.எஸ், பொதுபலசேனா, வெள்ளை ஏகாதிபத்தியம், ஜியோனிசம் என எல்லாமும் மக்களை கொன்று குவித்திருக்கின்றன.
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் அயோக்கியத்தனத்திற்கு எதிரான அரசியல் முற்போக்கு அரசியலாக ஈராக்கிலும், சிரியாவிலும், எகிப்திலும் 1950களைப் போல நடந்திருந்தால் அல்கொய்தா, ISIS, என்று எதுவும் முளைத்திருக்காது. சகதேசிய இன மக்களை கொன்றழிக்கும் இந்த பிற்போக்கு குழுக்கள் எக்காலத்திலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தப்போவதும் இல்லை. அமெரிக்காவின் கைப்பாவையாகி நிற்கும் இந்த கும்பல்கள் மதத்தின் பெயரிலியே தம்மை வளர்த்தன. ஆனால் அதே மத நம்பிக்கை கொன்றவனை குண்டு வைத்து அழிக்கின்றன.
இந்து என்று சொல்லிக்கொள்ளும் தலித்துக்கும், சூத்திர சாதிக்கும் கோவிலுக்குள் பூசை செய்ய அனுமதி கிடையாது. ஆனால் இந்த சாதிகள் ஆர்.எஸ்.எஸ்ஸினை வளர்ப்பதில் வெட்கப்படுவதும் இல்லை. சக மதத்தவனையே மனிதனாக நடத்தாத இந்த மத நம்பிக்கைகள் தான் மனிதனை மிருகமாகவே மாற்றி இருக்கின்றன. கடவுளின் பெயரில் நடக்கும் இக்கொடுமைகளை கடவுளும் கண் திறந்து கண்டித்தது இல்லை.
கிருத்துவ வெள்ளை ஏகாதிபத்தியங்கள் செய்யாத கொடுமைகளா??, ஜியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தில் செய்யாத கொடூரங்களா??.. அல்லது பெளத்த வெறியர்கள் ஈழத்தில் நிகழ்த்தாத படுகொலைகளா?.. இங்கெல்லாம் வராமல் எங்கே போனார் கடவுள்.
கருப்பு சட்டை தான் இந்துத்துவ மதவெறியனிடமிருந்தும், பெளத்த இன வெறியனிடமிருந்தும், இசுலாமிய மத வெறியனிடமிருந்தும் சமானிய மக்களை காப்பவன்.
தோழர் ஃபாருக் கடவுள்களையும் விட உயர்வானவன் புனிதமானவன். உலகின் அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக நிற்க முடிந்தவனை விட வலிமையான கடவுள் உலகில் இல்லை.
காசுமீரில் இசுலாமியனை காக்க வராத கடவுளுக்காக காத்திருக்காமல், வீதிக்கு வந்து போராடிய கருப்புச்சட்டைக்காரனை கோழைத்தனமாய் வீழ்த்திய உன் மதவெறி காசுமீரில் சிறுவனைக்கொல்லும் கொலைகாரனைவிட மிகக் கேவலமானது, கீழ்த்தரமானது, வெட்ககரமானது, இழிவானது.
கடவுள் இல்லையென்று சொல்வதற்கு ஒரு நேர்மை வேண்டும், அநீதியை எதிர்க்கும் மனம் வேண்டும். அது ஃபாருக்கிற்கு வாய்த்திருக்கிறது.
மாட்டுக்கறி உண்டால் கொலை செய்வோம் என்றார்கள், நாம் மாட்டுக்கறி உண்போம் என்று எதிர்வினையாற்றினோம்.
பாசிசம் எதை தடை செய்கிறதோ அதுவே நம்மின் போராட்ட ஆயுதமாக மாறுகிறது.
தோழர். ஃபாரூக்கை எது கொலை செய்ததோ, அந்த பாசிசத்திற்கு எதிராய் உரக்கச் சொல்கிறோம்,
“ கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை”
மதவெறிக்கு எதிரான நம் போராட்டம் ஃபாரூக்கின் மரணத்தால் நின்றுவிடாது. தோழர் ஃபாரூக்கின் கொலைகாரர்களை எந்த மதத்தாலும் எளிதில் உருவாக்கிவிட முடியும்.. ஆனால், தோழர்,ஃபாரூக் போன்ற ஒருவரை எந்த மதப்பிரசங்கத்தாலும் உருவாக்கி விட முடியாது.
யார் வேண்டுமானாலும் மதப்பற்றாளனாய் மாறிவிட முடியும். ஆனால் பகுத்தறிவாளானாய் மாறுவது அவ்வளவு எளிதல்ல. அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், அனைவரையும் சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடனும் நடத்தும் மனதினை கொண்டவனே பகுத்தறிவாளனாய் மிளிர்கிறான்.
அப்படியான ஒருவனாக தோழர்.பாரூக் இச்சமூகத்தில் நிமிர்ந்து நின்றார்.
அநீதிகளுக்கு எதிராய் களத்தில் நின்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர்.ஃபாரூக்கிற்கு வீரவணக்கம் .


