தமிழ்ப்பகைவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த மகுடம்


சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் மார்ச் 12 மாலை மகுடம் இசை நிகழ்ச்சி நடந்தது. அது குறித்த செய்தித்தொகுப்பு….

மகுடம் இசை நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டேன். தமிழ்த் தேசியத்துக்கு அருஞ்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள சௌரிராசனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

ஓர் இனத்துக்கு, அதுவும் தமிழினம் போன்ற ஓர் இனத்துக்குத் தொன்மங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதைத் தைப் புரட்சி மெய்ப்பித்துக் காட்டியது. குழலினிது யாழினிது என ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய வள்ளுவ எழுத்து இன்றும் நமக்குப் புரிகிறது, ஐயாயிரம் ஆண்டுக்கு முன் என் தமிழ் முன்னோர் தழுவிய காளைத் திமிலை நானும் இன்று தழுவி நிற்கிறேன் என்பதெல்லாம் சாதாரணச் செய்தி அல்ல என்ற உணர்வே மெரினாவில் வெளிப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே நான் மகுடம் தமிழர் வல்லிசை நிகழ்ச்சியைக் காண்கிறேன்.

அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழிசையின் தோல் கருவிகளை அரங்கேற்றி அவற்றுக்கு மீண்டும் ஆக்சிஜன் அளிக்கும் மகுடத்தின் முயற்சி தமிழினம் தன் தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்து கொள்வதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குறிப்பாக அங்கு வாசிக்கப்பட்ட மகுடம் எனும் தோல் கருவியை இசைத்த கலைஞர் என்னைச் சொக்க வைத்து விட்டார். பிறகுதான் தெரிந்தது அவர்தான் மகுடம் இசைக்கும் தலைமுறையில் கடைசிக் கலைஞர் என்று. நேற்று நிகழ்சசியைக் கண்ட இளைஞர்களில் ஒரு சிலரேனும் அவர் மாணவர்களாகி மகுட இசையைக் கற்பர். தமிழிசைப் பழமையை அழியாது காப்பர். இதுவல்லவோ உண்மைத் தமிழ்த் தொண்டு.

நையாண்டி மேளம், மகுடம், கொம்பை, சல்லிக்கட்டு மேளம், பெரிய மேளம், முரசு என அழிந்து கொண்டிருக்கும் நம் கலைக் கருவூலங்களை அதன் உச்சச் சுவையுடன் நம் முன்கொண்டு வந்து நிறுத்திய கலைஞர்களின் கலைப் பேராற்றலை உண்மையில் புகழ வார்த்தைகள் இல்லை. இந்தப் பயிற்சிக்கு எவ்வளவு உழைப்பு சிந்தியிருக்க வேண்டும் என நினைத்துப் பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது.

மாணவர் நகலகம் ஐயா அருணாசலம் அவர்களின் தமிழ்ச் சான்றோர் பேரவை தமிழ் மொழி காக்க நடத்திய 100 தமிழர் பட்டினிப் போராட்டம் நேற்று என் கண் முன் வந்து நின்றது. தந்தையின் கனவை நான் தொடர்ந்து நிறைவேற்றுவேன் என அவர் திருவுடல் முன் நின்று கூறினார் அவர் மகன் சௌரி. ஆம், அன்று தமிழ் காக்க நடைபெற்ற போராட்ட நினைவுகள் பழைய கனவாகி விடவில்லை என சௌரிராசன் மெய்ப்பித்துக் காட்டி விட்டார்.

தமிழன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவன் கலைகள் எவ்வளவு பழமை வாய்ந்தன தெரியுமா? எனக் கித்தாய்ப்பாகப் பேசித் திரிந்தால் போதாது. அதை நடைமுறையில் செய்து மெய்ப்பித்துக் காட்டுவதே நம் பகைவர்களுக்கு நாம் தரும் சரியான பதிலடி. அதைத்தான் சாதித்துக் காட்டியுள்ளார் சௌரி.- நலங்கிள்ளி

Leave a Response