அதிமுக வை இரண்டாக உடைக்க பாஜக சதியா?-சீமான் விளக்கம்

ஏன் ஐயா பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும்? சீமான் விளக்கம்

நேற்று 08-02-2017 இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசியபின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போதைய தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்துபேசியதாவது,

தமிழக முதல்வர் ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்திக் கையெழுத்து வாங்கினார்கள் என்று சொல்வதிலிருக்கும் உண்மையை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

தற்போதைய சூழலில் மாமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை! மாநகராட்சியில் தந்தை இல்லை! கோட்டையில் முதல்வர் இல்லை! ஆளுநர் மாளிகையில் ஆளுநர் இல்லை! ஆனால், எப்படியோ அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஐயா பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி சரியாகத்தான் இயங்க ஆரம்பித்திருந்தது. ஆனால், உடனடியாக அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அம்மையார் சசிகலா அவர்கள் முதல்வராக நினைத்ததற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. அப்படியே தொடரவிட்டிருக்கலாம். பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கியதுதான் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணச் சூழலுக்குக் காரணமாகிறது.

பெரும்பான்மை மக்கள் ஐயா பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர்வதையே விரும்புகிறார்கள். அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கும்போதே ஏன் பதவி விலகினார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது. அதே மனநிலையைத்தான் நானும் இந்த நாட்டின் ஒரு குடிமகனாகப் பதிவுசெய்கிறேன்.

அதிமுக-வை இரண்டாக உடைக்கப் பாஜக முயற்சி செய்கிறதா?

பின்புலத்தில் பாஜக இருக்கிறதா? இல்லையா? என்பதைவிட மக்களின் மனநிலையே முக்கியம். அதிமுக இன்னும் உடைந்துவிடவில்லை. ஆனால், அந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் ஓரிடத்தில் அடைத்துவைத்து இருப்பதும் இந்த அசாதாரணச் சூழலுக்குக் காரணம். அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கவிடாமல் கட்சி மேலிடத்தின் முடிவை திணிப்பது போல இருக்கிறது இந்தச் சம்பவம்.

தமிழகமெங்கும் சென்று மக்களைச் சந்தித்து இதுகுறித்துக் கேள்வியெழுப்பினால் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு ஐயா பன்னீர்செல்வத்திற்கு இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அதைப் புரிந்துகொண்டு கட்சியில் இருப்பவர்களும் மற்றவர்களும் முடிவெடுக்கவேண்டும். அதுதான் மீதமுள்ள 4 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியைத் தொடர ஏதுவானதாகும். இல்லையென்றால் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் தேவையற்ற செலவு தான் ஏற்படும்.

ஆட்சியைத் தொடருவதா? வேண்டாமா? என்பதை அந்தக் கட்சிதான் முடிவெடுக்கவேண்டும். தேர்தலை சந்திக்கும்போது மக்கள் முடிவெடுப்பார்கள்.

ஆட்சியைக் கைப்பற்ற திமுக திட்டமிடுகிறதா?

எதிர்க்கட்சி தலைவரைப் பார்த்து ஒரு முதல்வர் சிரிப்பதே சமூகக் குற்றம்! அதுவே பெரிய துரோகம் என்று கூறுவது ஏற்புடையதல்ல! அது ஒரு மாண்பு! இதுவரை அந்தப் பண்பாடு இல்லாமல் போனதால்தான் தமிழ்நாடு நாசமாகப் போனது. எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது முதல்வர் வணக்கம் தெரிவிப்பதும், பேசிக்கொள்வதும், சிரிப்பதுமான நிகழ்வுகளைச் சூழ்ச்சி, சதி என்பதை ஏற்கமுடியாது.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி?

அதைக் கணித்துச் சொல்வது இயலாதது! குற்றம் நடைபெற்றுள்ளது என்றுக்கூறி தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. குற்றமில்லை என்று விடுவிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தீர்ப்புக்கு பிறகு வேண்டுமானால் முதலமைச்சர் ஆவதற்கான முடிவை சசிகலா எடுத்திருக்கலாம்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணைக்குழு அமைப்பது பற்றி?

தாமதமான முன்னெடுப்பு. நான் உட்பட எல்லோரும் அதில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தோம். என்னைப் போன்று பலரும் பல கேள்விகளை எழுப்பினார்கள். அந்த நேரத்தில் தரமறுத்த பதிலை இப்போது யாருமே கேட்காத நிலையில் எதற்காக ரிச்சர்டு பீலேவும், மருத்துவர்களும் ஊடகத்தைச் சந்தித்து விளக்கமளித்தனர்? கேட்கும்போது விளக்கமளிக்காமல் இருந்துவிட்டு யாரும் கேட்காதபோது பதிலளிப்பது உயிரோடு இருக்கும்போது சோறு தராமல் இறந்தபிறகு பாலூற்றுவது போல முரணாக இருக்கிறது. அவர்கள் தற்போது சொல்வதில் பல முரண்கள் இருக்கிறது. உதாரணமாக, கை வீங்கி இருந்ததனால் கையெழுத்து போட இயலவில்லை; கைரேகையிட்டார் என்பவர்கள் ஜெயலலிதா எதையாவது சொல்ல முற்படும்போதெல்லாம் எழுதி எழுதிக் காட்டியதாகக் கூறுவது எவ்வளவு முரணாக இருக்கிறது? அதேபோல இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடைப்பயிற்சி மேற்கொண்டார் ஜெயலலிதா என்கிறார் ரிச்சர்டு பீலே. அதேசமயம், ஜெயலலிதாவை இலண்டனுக்கு அழைத்துச்சென்று மருத்துவம் பார்க்கக்கூடிய அளவிற்கு அவர் உடல்வலிமை பெறவில்லை என்றும் கூறுகிறார். இதில் எதை நம்புவது?

ஏன் அவருக்கு திடீரென மாரடைப்பு வந்தது என்று தெரியவில்லை என்கிறார்கள். ஆனால், நமக்கு ஒன்று தெரிகிறது ஜெயலிலதாவிற்கு மாரடைப்பு வந்ததே இவர்களால்தான். அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவில்லையெனில் ஓரிரு நாளில் வீடு திரும்பியிருப்பார் என்கிறார்கள். அப்படியெனில், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது பகிரியில்
(Whatsapp) மக்களுக்குத் தாமாகப் பேசி செய்தி அனுப்பியதை போன்று அவருக்காகத் தங்களது இறைவனிடம் அனுதினமும் இரவுபகல் பாராமல் பனியிலும் வெயிலிலும் விடாது வேண்டிக்கொண்டிருந்த இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தனது உடல்நிலை குறித்துப் புகைப்படங்களை வெளியிட விரும்பாநிலையில் பகிரியில் பேசி அனுப்பியிருக்கலாமே! அதை ஏன் அவர் செய்யவில்லை எனும்போது சந்தேகம் எழுகிறதல்லவா?

ஜெயலலிதாவிற்கு நடைபெற்ற சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைபடங்களை அவர் இறந்தபிறகும் வெளியிட மறுக்கிறார்கள். அவர் ஒரு சாதாரணப் பெண்மணி என்றால், கடந்துபோய் விடலாம். ஆனால், அவர் 8 கோடி தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் பெற்ற தமிழகத்தின் முதலமைச்சர் எனும்போது அவருக்கு நடந்த உண்மையை அறியவேண்டிய தேவை மக்களுக்கு ஏற்படுகிறது. அதை விளக்கவேண்டிய கடமை மருத்துவ நிர்வாகத்திற்கும், அரசு பொறுப்பில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

ஜெயலலிதாவின் மருத்துவச்செலவுக்கு 5.5 கோடி செலவானதாகவும் அதை அவரது குடும்பத்தினர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் யார் அந்தக் குடும்பத்தினர்? என்ற கேள்வி எழாமல் இல்லை! இந்த மருத்துவக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு வெறும் கண்துடைப்பு தான். இது மேலும் பல சந்தேகங்களை நமக்கு எழுப்புகிறது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பி.எச். பாண்டியன் எழுப்பும் குற்றச்சாட்டுகள் பற்றி?

ஐயா கலைஞர் அவர்கள் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அவரது உடல்நிலை குறித்து அறியப் பயன்பட்டது. அதுபோன்று பல இலட்சம் மக்களுக்குப் பதில்சொல்லவேண்டிவரும் என்று தெரிந்தும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படாதது ஏன்? ஜெயலிலதா இயல்புநிலைக்குத் திரும்பியபோதும், எழுந்து நடக்கிறார், சிரிக்கிறார் என்ற போதும்கூட ஒரு புகைப்படத்தையும் வெளியிடாதது ஏன்? ஆளுநர் கண்ணாடிக் கதவினூடாகப் பார்த்தார் என்றால், அதை எப்படி ஏற்பது? இதுபோன்ற பல கேள்விகள் அனைவரிடத்திலும் உள்ளது. இதற்கெல்லாம் ஐயா பன்னீர்செல்வம் சொல்வது போல் உரிய நீதி விசாரணை அமைத்தால் பல உண்மைகள் வெளிவரும் என நம்புகிறேன்.

சசிகலாவா? பன்னீர்செல்வமா?

அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாம் தலையிடமுடியாது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இல்லாமல் ஒரு சாதாரணத் தமிழ்க்குடிமகனாக எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், வர்தா புயலின்போது வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு களத்திற்கு இரண்டு அமைச்சர்களோடு நேரிடையாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். அதேபோல் எண்ணூர் துறைமுகம் அருகே நடந்த கப்பல்கள் மோதலில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டிய விபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை உடன் அழைத்துசென்று பணிகளை நேரில் பார்வையிடுகிறார். இதுபோன்று எளிமையாகவும் துரிதமாகவும் அம்மையார் சசிகலாவால் இயங்கமுடியாது. ஏனெனில், சசிகலாவிற்கென்று தனி “ஹெலிகாப்டர்’ 100 “கார்’ வழியின் இருமருங்கிலும் 1,000 தொண்டர்கள் மலர்தூவி வரவேற்கவேண்டும். இது ஜெயலலிதாவின் ஆடம்பர ஆட்சியின் நீட்சியாகத்தான் இருக்கும். எனவேதான் இதுபோன்ற ஆடம்பரமில்லாமல் மிக எளிமையாகச் செயல்படும் ஒரு எளியமகனின் ஆட்சி தொடரவேண்டும் என விரும்புகிறேன்.

நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். நாடு நாசமாகத்தான் போகவேண்டுமென்றால் எதுவும் நடக்கலாம்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Tags:

Leave a Response