ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடத்தப்பட்டது ஏன்? – ஐயம் எழுப்பும் ஆர்வலர்கள்

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் ஐந்தாம் நாள் 11.30 மணிக்கு பிரிந்தது.

ஜெ வின் உடல் இரவு 2.15 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் அவரது இல்லத்தில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை 6 மணி முதல் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

ஜெயலலிதா உடலுக்கு பச்சை நிற பட்டுச் சேலை கட்டப்பட்டு இருந்தது. கைக்கெடிகாரம், கழுத்தில் தங்கச் சங்கிலி, காதில் வைரக் கம்மல், கைகளில் வளையல்கள், கை விரல்களில் மோதிரம் ஆகியவை அணிவிக்கப்பட்டு இருந்தன.

மாலை 4.17 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டி மூடப்பட்டு முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை முப்படை வீரர்கள் சுமந்து சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றினர். அந்த வாகனம் ராணுவ வாகனத்துடன் இணைக்கப்பட்டது.

மாலை 4.28 மணிக்கு அங்கிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் மாலை 5.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிடம் முன்பு வந்து நின்றது. பின்னர், வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவின் உடல் இறக்கப்பட்டு, உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. முப்படை வீரர்கள் அவரது உடல் இருந்த பெட்டியை சுமந்து சென்றனர்.

அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் சுமார் 40 அடி தூரத்தில், ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. குழிக்கு வெளியே ஜெயலலிதாவின் உடலை வைப்பதற்காக சந்தனப் பேழை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது.

பின்னர், இந்து முறைப்படி ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதில் சசிகலா, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் ஆகியோர் கலந்துகொண்டு பால் ஊற்றி, உப்பு, பூக்கள் தூவி இறுதிச் சடங்குகளை செய்தனர். அதன் பின்னர், மாலை 6 மணிக்கு சந்தன பேழைக்குள் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. அவரது உடலில் அணியப்பட்டு இருந்த எந்த ஆபரணமும் அகற்றப்படவில்லை. பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கின. அதனைத் தொடர்ந்து, மாலை 6.05 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட பெட்டி, குழிக்குள் கயிறு மூலம் மெதுவாக இறக்கப்பட்டது.

சசிகலா உள்ளிட்டோர் குழியை சுற்றி வந்து ரூபாய் நோட்டு, சந்தன மரத்துண்டு ஆகியவற்றை குழிக்குள் போட்டு சில சடங்குகளை செய்தனர். அதன்பின்னர், குழி மூடப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்கள் தூவப்பட்டன. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெற்றது.

ஜெயலலிதாவின் இறுதி நிகழ்வு மிகவும் அவசர அவசரமாக நடத்தப்பட்டுவிட்டது எனவும் இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளதெனவும் விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன.

மே17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் இது பற்றிக் குறிப்பிடுகையில்,

முதலமைச்சர்.ஜெயலலிதாவின் மரணச் செய்தி வெளிவந்த கிட்டதட்ட 14 மணி நேரத்திற்குள்ளாக இறுதிச்சடங்கு நடத்தப்பட்டிருக்கிறது.

முதலமைச்சராக இருப்பவரின் மரணம், ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, ஆட்சியில் இருக்கும் கட்சி, இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற நிலையில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்கான இறுதிச்சடங்கை இவ்வளவு அவசரமாக நட்த்தி முடிக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்கிற கேள்வியை எளிதில் கடந்து விட முடியாது.

ஒருவித பதட்டத்தையும், நெருக்கடியையும் செயற்கையாக ஏற்படுத்தியும், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடுவை காவல்காரராக அமர்த்தியும், ஆளுனரை முன்னிலைப்படுத்தியும் இந்தச் செயல் ஏன் இவ்வளவு அவசரமாக நடத்தப்பட வேண்டும்?

தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் இறுதி நிகழ்வில் பங்கெடுப்பதும், மரியாதை செலுத்துவதும், தனது தலைமைக்கு நேரில் முகம்பார்த்து அஞ்சலி செலுத்துவதும் ஏன் நடத்தப்பட வில்லை?

அனைத்தும் முடிந்து சராசரி இயல்பு வாழ்க்கையை உடனடியாகக் கொண்டுவருவதன் அவசியம் எங்கிருந்து வருகிறது? வழக்கம் போல பரபரப்பான வாழ்க்கை சூழலிலும், பணப்பற்றாக்குறையிலும், வங்கியின் வாசலிலும் இந்த மரணம் மறக்கடிக்கப்படச் செய்யப்பட வேண்டியது எதற்காக?

மக்களால் அங்கீகரிக்கப்பட்டவரோ அல்லது மரியாதை கொடுக்கப்பட்டவருக்கோ இறுதி மரியாதை கொடுக்கும் நிகழ்வு அனைவரையும் உள்ளடக்கியே நட்த்தப்பட்டுவருகிறது. இப்படியான நிகழ்வு ஒரு எழுச்சியையோ, துக்கத்தின் ஆழத்தையோ, உறுதிப்படுத்தலையோ நிகழ்த்துகிறது. அறிஞர் அண்ணா முதல் அனைவரும் இப்படியான ஒரு பதிவினை தங்களது இறுதி நிகழ்வில் ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் பிற இடங்களிலும் இது போன்றே நடத்தப்பட்டது.

இம்மாதிரியான மக்கள் திரள் ஏற்படுவதை சாத்தியப்படுத்தவே ஈழப்படுகொலையின் போது தோழர்.முத்துக்குமாரின் உடலை மூன்று நாள் பாதுகாத்தோம். அது வரலாற்று சிறப்புமிக்க ஊர்வலத்த்னை பதிவு செய்த்து. ஆனால் அதன் பின்னர் அனைத்து ஈகியருக்கும் இப்படியான வாய்ப்பினை அரசு தடுத்த்து. இன்றுவரை இயக்க அரசியலில் இப்படியான நெருக்கடிகளே கொடுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து காணமுடிகிறது,. இந்த வழிமுறைகளுக்கு துணை போன கட்சியினருக்கும் இதே நிலை ஏற்பட்டிருப்பது. ஏன் இது நடந்தது?

பிராந்திய கட்சிகளின் ஆதிக்கத்தினை நிறுத்திடுமா ஜெயல்லிதாவின் மரணம், திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தேசிய கட்சிகளுக்கு நகரும் முக்கிய தருணம் இது, ஜெயல்லிதா விட்டுச் செல்லும் இடத்தை வைத்து பாஜக தமிழக அரசியலை கைப்பற்றவேண்டுமென சு.சாமி சொல்வது என பல்வேறு புள்ளிகளை இணைத்தால் இந்த அவசர இறுதி நிகழ்வின் அரசியல் புரியும்.

வெங்கைய நாயுடு ஏன் ஜெயல்லிதா உடல் அருகே நிற்க வேண்டும்? அவர் கட்சி உறுப்பினரோ, ஜெயல்லிதா நண்பரோ, உறவினரோ, குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. ஒரு கேபினட் அமைச்சர் அவ்வாறு அங்கே ஆக்கிரமித்து நிற்கவேண்டிய அவசியம் என்ன? தொலைக்காட்சிகளில் பார்ப்பன பாஜக உறுப்பினர்கள்/ ஆதரவாளர்கள் ஏன் முன்னிறுத்தப்பட வேண்டும்.? எந்த அரசியலை திணிக்க விரும்புகிறார்கள்?

மிக நுணுக்கமாக திட்டமிட்டு இறுதி நிகழ்வு அவசர அவசரமாக நடத்தப்பட்டது. குறைந்த பட்சம் ஜெயல்லிதா உடல் புதைக்கப்படும் நிகழ்வின் இட்த்தில் போதுமான வெளிச்சமோ, காட்சிப்படுத்தலோ நட்த்தாமல் போனதை கவனிக்காமல் இருக்க இயலாது.

மக்கள் திரளாக சேர்வதற்கு முன்பே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வந்து சேர்வதற்கு அவகாசம் கொடுக்காமல், அப்படியான திட்டமிடலுக்கு வாய்ப்பினை கொடுக்காமல், அதிமுகவின் கட்சியினரின் முடிவிற்கு விடாமலும், அதை முடிவெடிக்க்க் கூடிய சூழலை அனுமதிக்காமலும் இந்நிகழ்வு மோடி அரசினால் கட்டுப்படுத்தப்ப்ட்ட்தையே கவனிக்க முடிகிறது.

ஜெயல்லிதாவிற்கு பெரும்திரளாக மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் மாநில அரசியல் திரட்சி மேலும் வலுப்பெறும் ஒரு நிகழ்வாக ஜெயல்லிதாவின் இறுதி நிகழ்வு அமைந்துவிடும் என்பதை மோடி அரசுக்கு உணர்ந்தே இருக்கிறது. இதுவே மிகமுக்கிய காரணம் என்பதே உண்மை.

மேலும், இந்திய தொலைக்கட்சிகளில் ஏன் ஜெயல்லிதா உடல் எரிக்கப்படாமல் புதைக்கப்பட்ட்து எனும் விவாதம் வைக்கப்படுகிறது.

அதாவது இங்கிருக்கும் மாநில அரசியல் மற்றும் அதன் அடையாளங்கள், திரட்சியடைதல் என்பதை இந்திய அரசு விரும்பவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகின்றன.

மேலும் அதிமுக கொடி மறைக்கப்பட்டு, இந்தியக் கொடி முன்னிலைப்படுத்தப்பட்ட்து எதனால்? தந்தி தொலைக்காட்சி வர்ணனையாளர் ‘இந்திய அரசியலுக்கும், நலனுக்கும் முன்னிலை கொடுத்தவர் ஜெயல்லிதா’ என திரும்ப திரும்ப வலிறுத்தியது எதனால்?

நேற்றிலிருந்து பாஜகவின் வெங்கய்ய நாயுடுவிற்கு இங்கு என்ன வேலை? எனும் கேள்வியிலிருந்தே விவாதங்கள் துவங்குகிறது.
மரபாகவே குறைந்த்பட்சம் 24 மணி நேரம் உடல் பார்வைக்கும், மரியாதைக்கும் வைப்பது எனும் நடைமுறையை யார் மாற்றியது எனும் கேள்வி எளிதில் சாகாது?. ஜெயல்லிதாவின் இறுதி நிகழ்வில் அதன் தொண்டர்கள் பெருமளவு பங்கேற்கமுடியாமல் செய்யப்பட்ட கேள்வியை எழுப்ப வேண்டியது அவசியம்.

ஏன் அவசர அவசரமாக ஜெயல்லிதாவின் இறுதி நிகழ்வு நடத்தப்பட்டது என்கிற கேள்வி அதிமுகவினருக்கானது மட்டுமல்ல.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response