ஆணாதிக்கச் சூழலில் தனித்து நின்று வென்றவர் – ஜெயலலிதாவுக்கு விக்னேசுவரன் புகழாரம்

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை (டிசம்பர் 5.2016) இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 6 அன்று வடமாகாண சபை, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியபோது தமிழக முதல்வரின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரங்கல் உரையாற்றினார்.

செல்வி ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார் என்பது அவரின் திடசங்கற்பத்தையும் உழைப்பையும் விடாமுயற்சியையும் கெட்டித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது என்று அவர் தனது உரையில் குறி;ப்பிட்டார்.

அவரது ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது.

தமிழின் மீதும் தமிழ் மக்கள் வாழ்வின் மீதும் தமிழ் மக்கள் எதிர்காலம் மீதும் அவர் மிக்க பற்றுறுதி கொண்டிருந்தார். கரிசனையுடன் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார். தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியல் தலைவரை இழந்து விட்டது என்றார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாண சபை ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Response