மதுரையில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுகின்றன – கண்டனம் செய்யும் சமூக ஆர்வலர்கள்

மதுரையில் மரங்கள் வெட்டப்படுவதில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் அவற்றைத் தடுக்கக் கோரியும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது பற்றிய விவரம்,

மதுரை மாட்டுத்தாவணி முதல் ஒத்தக்கடை வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையுள்ள சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த சாலையிலுள்ள பனை, மருதம், புளி, அத்தி, அரசு, ஆலம் உள்ளிட்ட சுமார் 100 பழமையான மரங்கள் வெட்டும் பணி நடைபெறுகிறது.

சாலை விரிவாக்கத்திற்க்காக வெட்டப்படும் மரங்கள் பெருக்கல் குறியீடு மையிட்டு குறிக்கப்பட்டுள்ளது. மரத்தை வெட்டும் குத்தகைக்காரர்கள், சாலை விரிவாக்கத்திற்கு வெளியேயுள்ள அதாவது மையிட்டு குறிக்கப்படாத மரங்களையும் வெட்டி சாய்த்து வருகிறார்கள். இந்த சட்டவிரோத செயல் மதுரையிலுள்ள உயர்நீதிமன்றம் முன்பே நடைபெற்று வருகிறது.

மரம் வெட்டும் பணி அரசு அதிகாரிகள் முன்னிலையில்தான் நடைபெற வேண்டும். இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சட்ட விரோதமாக மரம் வெட்டும் இச்செயலை, அதற்க்கு துணை நின்ற அரசு அதிகாரிகளை நாணல் நண்பர்கள் இயக்கம் மற்றும் மண்ணின் மரங்கள் மீட்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சட்ட விரோதமாக மரம் வெட்டிய குத்தகைக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக 10 புதிய மண்சார்ந்த மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வேண்டும். இனி சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரம் வெட்டும் பணி துவங்குவதற்கு முன்பு அந்த மரங்களில் உள்ள பறவைகளின் கூடுகள், முட்டைகள், குஞ்சுகள் ஆகியவற்றை கணக்கெடுக்க வேண்டும்.

கூடு கட்டியிருக்கும் பறவைகளின் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மரங்களை வேரோடு பெயர்த்து வேறு இடங்களில் நடும் இயந்திரம் மூலம் மரங்களை அகற்றி, சாலை விரிவாக்க பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இச்சட்ட விரோத செயலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நாணல் நண்பர்கள் இயக்கம் சார்பாக அஞ்சல் வழியாக மனு அனுப்பப்பட்டுள்ளது என்று நாணல் நண்பர்கள் இயக்கம், மண்ணின் மரங்கள் மீட்பு இயக்கம் ஆகியனவற்றின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response