அரசும் காவல்துறையும் சேர்ந்து என் மகனைக் கொன்றுவிட்டார்கள் – ராம்குமார் தந்தை கதறல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பொறியாளர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். அவருக்காக வழக்கறிஞர் ராம்ராஜ் என்பவர் ஆஜராகி வந்தார்.
இந்த நிலையில், ராம்குமார் செப்டம்பர் 18 அன்று மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக புழல் சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் பேசும்போது,

‘‘என் மகனுக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிறையில் அவனைச் சந்தித்த ஒவ்வொரு நாளும் என்னிடம், ‘ நான் இந்த கொலையைச் செய்யலை. ஆனால், ஏதோ சதியால் என்னை சிக்க வைச்சிருக்காங்க. விசாரணையில் உண்மை தெரியவரும். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்க. உண்மை சீக்கிரம் வெளியே தெரிய வரும்’னு சொல்லிக்கிட்டே இருந்தான்.

நானும் அவன் சொன்னதை நம்பியே இருந்தேன். என்னோட குடும்பமே இந்த வழக்கு விசாரணையை எதிர்பார்த்து இருந்துச்சு. அவன் விடுதலையாகி வருவான்னு நம்பி இருந்தோம். அவனுக்கும் சுவாதி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனக்கும் எனது குடும்பத்துக்கும் நிச்சயமாக தெரியும். ஆனால், அவனை இந்த வழக்கில் சிக்க வைக்க அரசுத் தரப்பில் தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. எங்க வழக்கறிஞர் ராம்ராஜ் இதில் இருந்து விலகிட்டதாக பொய்யான வதந்தியை கிளப்பி, அவருக்கும் எங்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த முயற்சி செஞ்சாங்க.

அப்போது கூட இந்தளவுக்கு நடக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால், இப்போது என் மகனை அரசும் காவல்துறையும் சேர்ந்து கொலை செஞ்சு இருக்காங்க. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்காங்க என்பது எனக்குத் தெரியாது. என் மகன் தற்கொலை செய்யும் அளவுக்குக் கோழை அல்ல. அவனைக் கடைசியாக சந்தித்தபோது கூட, ‘அப்பா நீங்க தைரியமா இருங்க. நான் நிரபராதியா வெளியே வருவேன். கவலைப்படாதீங்க. அம்மாவிடமும் தங்கச்சிகளிடமும் இதை சொல்லுங்க’னு சொன்னான்.

அதற்குள் இப்படி ஒரு தகவலை போலீஸார் எனக்கு தெரிவிச்சு இருக்காங்க. இதில் சதி இருக்கிறது. இதை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசே இப்படி ஒரு செயலை செஞ்சிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. என் மகனின் மரணத்தில் நடந்த உண்மையை அரசு வெளிப்படுத்தியே தீர வேண்டும். அதுவரை நான் ஓயமாட்டேன், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று உறுதிபடக் கூறுகிறார்.

எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இம் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் இது தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Response