செப்டம்பர் 16 முழுஅடைப்புப் போராட்டம் – ஜெயலலிதா அமைதியாக இருப்பது ஏன்?

காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, முழு அடைப்புப் போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு, தி.மு.க., மதிமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், தேமுதிக, பா.ம.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு அளித்துள்ளன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கமும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்துள்ளன. சென்னை,கோயம்பேடு காய்கறி மற்றும் பழங்கள் மொத்த விற்பனை மார்க்கெட் வியாபாரிகளும், போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பாஜக மட்டும் இதில் பங்கேற்க முடியாதென அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆளும்கட்சி இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதால் அவர் அமைதி காக்கலாம். அதேசமயம் இப்போராட்டம் குறித்து அதிமுக கட்சியின் நிலை என்ன? என்பது பற்றியும் இதுவரை தகவல் இல்லை.

அண்டை மாநிலத்தில் வாழ்வாதாரத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு தார்மீக ரீதியான உணர்வுகளை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்தும் வண்ணம் இப்போராட்டம் நடக்கிறது. இதில் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக அமைதி காப்பது ஏன்? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.

Leave a Response