கன்னட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை

கர்நாடகாவில் அப்பாவித் தமிழ்மக்கள் அநியாயமாகத் தாக்கப்பட்டும் உடைமைகள் நாசமாக்கப்பட்டும் நிர்கதியாக நிற்கின்றனர். இரண்டு நாட்களில் சுமுகநிலை திரும்பியதென்று சொல்லிவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவர். பாதிக்கப்பட்டவர்களின் நிலை? அதைக் கருத்தில் கொண்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒரு நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. அது தொடர்பாக அவ்வமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.09.2016) விடுத்துள்ள அறிக்கை:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து கர்நாடகாவில் இனவெறியர்கள் தமிழர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழகப் பேருந்துகள், லாரிகள், கார்கள் என வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாததால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.

தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவையே தமிழர்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரமாகவும் சாட்சியங்களாகவும் விளங்குகின்றன.
கர்நாடக அரசைக் கண்டித்து நாளைய தினம் தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடகாவில் நிலவும் சட்டமற்ற (Lawlessness) நிலைமைக் குறித்து மூன்று நாட்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் ‘காவிரி நீர் பிரச்சனைக் காரணமாக கர்நாடக மாநிலத்தில் நடந்த கலவரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.
எனவே, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தலைமையில் உயர்மட்ட குழு கர்நாடக மாநிலத்திற்குச் சென்று தமிழர்களிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து அனைத்து ஆதாரங்களையும் தொகுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்ப உள்ளோம்

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response