புதுப்பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகும் ஜெயலலிதா நடித்த “சூரியகாந்தி”!

புரட்சித்தலைவி – முத்துராமன் நடித்து 1973 ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் சூரியகாந்தி. வெளியாகி 150 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றி பெற்ற படமே தற்போது நவீன வடிவமாக டிஜிட்டல் மற்றும் சினிமாஸ் கோப்பாக மாற்றப் படுகிறது.

43 வருடங்களை கடந்து 44 ம் வருடத்தை தொட்டிருக்கும் சூரியகாந்தியின் கதைக்களம் எந்த கால கட்டத்திற்கும் பொருத்தமானதாக இருப்பதால் இந்த தலை முறையினரும் ரசிக்க கூடிய படமாக இது இருக்கும்.

கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற தாழ்வு மனப்பாண்மை பிடித்து ஆட்டும் ஈகோ தான் கதைக்களம். சோ, மனோரமா , மௌலி, காத்தாடிராமமூர்த்தி, MRR.வாசு போன்றோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் புரட்சி தலைவி அவர்கள் இரண்டு பாடல்களை சொந்தக் குரலில் பாடி இருந்தார்.

“ஓ மேரோ தில்ரூபா” என்ற பாடலும் “நானென்றால் அது நீயும் நானும்” என்ற பாடலும் புரட்சி தலைவி சொந்தக் குரலில் பாடி பிரபலமான பாடல்கள். அத்துடன் கண்ணதாசன் எழுதி நடித்து டி.எம்.எஸ் பாடிய “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? என்ற பாடல் பரபரப்பாக பேசப்பட்ட பாடல்.

பாடல்களுக்காகவும், படத்தின் கதைக்காகவும், சிறப்பான நடிப்பு, மற்றும் இசை என்று எல்லோராலும் பாராட்டு பெற்ற சூரியகாந்தி படத்தின் நூறுறாவது நாள் வெற்றிவிழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதே விழாவில் புரட்சிதலைவி அவர்களுக்கு தந்தை பெரியார் பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை, வசனத்தை A.S.பிரகாசம் எழுதி இருந்தார். வித்யா பிலிம்ஸ் வேணுகோபால் தயாரித்த இந்த படத்தை முக்தா வி.சீனிவாசன் இயக்கி இருந்தார்.

இந்த காலகட்டத்துக்கு மட்டுமல்ல. எந்த காலகட்டத்துக்கும் பொருத்தமான சூரியகாந்தி மெருகேற்றப்பட்டு கருப்பு வெள்ளையிலேயே டிஜிட்டல் சினிமாஸ் ஸ்கோப்பில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை A.P. பிலிம்ஸ் கஜலட்சுமி வெளியிடுகிறார்.

Leave a Response