
ஈரோடு புத்தகத் திருவிழா “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஈரோடு வ உ சி பூங்காவில் நடத்தப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா ஆகஸ்ட் 5 ஆம் நாள் தொடங்கியது.
புத்தகத் திருவிழாவை தொடக்கிவைத்து உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது:
கவியரசு கண்ணதாசன் தென்றல் இதழை நடத்தியபோது நெடுங்கதை பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்தார். பள்ளி மாணவனாக இருந்த நான், தென்பாண்டி வீரன் என்ற கதையை எழுதி அனுப்பினேன். அதற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. என்னைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எழுத்தாளனாக அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன்.
மனிதனின் மகத்தான படைப்பு என்பது நூல்கள்தான். மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் எதுவானாலும் அவை நிலைத்து நிற்கவில்லை. எத்தனையோ மன்னர்கள் கட்டிய அரண்மனைகள் அழிந்துவிட்டன. இனங்கள் காலப்போக்கில் மறையும், நாகரிகம் மறையும். ஆனால், புத்தகங்கள், படைப்பாக்கம் அழிவற்றது. அது எழுதப்பட்ட காலத்தில் எப்படி தோற்றமளித்ததோ, அதே போல இளமையாக தொடரும்.
செங்குட்டுவன் காலத்தில் அவன் இமயம் வரை சென்று கனக விஜயனை வென்று, இமயத்தின் கல் எடுத்து வந்து கண்ணகி சிலை வைத்தான் என சிலப்பதிகாரம் சொல்கிறது. இன்று அவன் வாழ்ந்த மாளிகை இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்.
உலகில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். சங்க காலத்தில் வணிகத்துக்காகவும், படையெடுத்தும் பல நாடுகளுக்குத் தமிழர்கள் சென்றனர். பிற மொழி பேசும் தேசங்களுக்கு அவர்கள் சென்று வந்துள்ளனர். மற்ற நாடுகளில் இருந்து வரும் சொற்களை திசை சொற்கள் என்று தொல்காப்பியர் கூறினார்.
எந்தெந்த நாடுகளைத் தமிழர்கள் அடக்கி ஆண்டார்களோ அந்த நாடுகளுக்கெல்லாம், ஆங்கிலேய ஆட்சியின்போது கொத்தடிமைகளாகத் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். அப்படி போனவர்கள் 6 தலைமுறைக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கைப் போரின் விளைவாகத் தாங்கள் பிறந்த மண்ணில் வாழ முடியாமல் அகதியாகப் பரவினர். அங்கெல்லாம் நமது தமிழர்கள் எழுதிய படைப்புகளின் பெருமையை உணர வைக்க இக்கண்காட்சியில் உலகத் தமிழர் படைப்பரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 1981-இல் எண்ணற்ற தமிழ் நூல்கள் அடங்கிய நூலகம் கொளுத்தப்பட்டது. கலாசாரம், பண்பாட்டை அழிக்க முதல் நடவடிக்கை நூலகத்தை அழிப்பதாகும்.
சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ்ச் சமுதாயத்தை நூல்களால்தான் காப்பாற்ற முடியும். தமிழகத்தில் நூலகங்கள் நெருக்கடியான நிலையில் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள நூல்களை செம்மைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தக வாசிப்பு பழக்கம் ஊர்ஊராகப் பரவ வேண்டும் என்றார்.
