
எத்தனை வருடங்களானாலும் எம்.ஜி.ஆரின் மீதான மோகம் குறையவே குறையாது என்பதை சினிமாக்காரர்களும் அவ்வப்போது நிரூபித்து வருகிறார்கள். தங்களது படங்களில் எம்.ஜி.ஆரை பின்பற்றி நல்லவிதமாக நடிக்கிறார்களோ இல்லையோ, அவர் சம்பந்தமான வார்த்தைகளை தங்கள் படத்துக்கு தலைப்பாக வைத்து விடுகிறார்கள்.. ரஜினி டைட்டில் கிடைக்காதவர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் சரண்டர் ஆவதும் உண்டு.
அந்தவகையில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என பெயர் வைத்துள்ளார்கள். ஒருகாலத்தில் ‘என் அண்ணன்’ படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய பிரபலமான பாடல் வரிதான் இது.. அதன்பின் ராமராஜன் நடித்த படத்திற்கு டைட்டிலாக மாறியது.. இப்போது ஜீவாவின் பட டைட்டிலாக மாறியுள்ளது.
கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பாக ‘திருநாள்’ படத்தை தயாரித்த செந்தில்குமார் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். படத்தை ஜே.எம்.அருண் என்பவர் இயக்குகிறார். ஜீவா நடித்துள்ள ‘திருநாள்’ வெளியான தினமான இன்றே புதிய பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


