உடனே தமிழையும் வழக்காடு மொழியாக்குங்கள் – திராவிடர் கழகம் வலியுறுத்தல்

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை-பெரியார் திடலில் 30.7.2016அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில்,

த.வீரசேகரன், ச.இன்பலாதன், பொ.நடராசன் (மதுரை), அ.அருள்மொழி, ஆ.வீரமர்த்தினி, மு.க.இராஜ சேகரன், இரா.ரத்தனகுமார் (சென்னை), க.பொன்னையா (மதுரை), கோ.சா.பாஸ்கர் (கல்லக்குறிச்சி), ந.இளங்கோ (மதுரை), துரை.ஸ்டாலின் (தஞ்சை), மாரிமுத்து (உரத்தநாடு), ம.திராவிட அரசு (வடலூர்), பீ.சுரேசு (கும்பகோணம்), (கரூர்), இரா.சரவணகுமார் (தஞ்சாவூர்), ம.திராவிட எழில் (தஞ்சாவூர்), மு.இராசா (ஜெயங்கொண்டம்), ஆர்.உத்திரகுமாரன் (ஊரப் பாக்கம்), மு.சித்தார்த்தன் (மதுரை), இர.கு.நிம்மதி (திரு நாகேஸ்வரம்), ம.வீ.அருள்மொழி, மு.சென்னியப்பன் (நம்பியூர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: திருநெல்வேலி வழக்குரைஞர் சங்கத்தலைவர் முத்துராமலிங்கம் அவர்களின் மறைவை யொட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

2) மெட்ராஸ் அய்க்கோர்ட் என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டின் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான உயர்நீதிமன்றமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பேரரசரின் ஆணையினால் உருவாக்கப்பட்டதால் இந்நீதிமன்றம் சார்ட்டட் அய்க்கோர்ட் என்ற சிறப்பு சலுகை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் நீதிமன்றமானதால் அன்றைய தலைநகரமான மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாநிலத்தின் உயர்நீதிமன்றமும் அம்மாநிலத்தின் பெயருடன் அழைக்கப் படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரை கிளையும் இனி தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்றும் தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரை கிளை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

3) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழ்மொழியும் வழக்காடு மொழியாக சட்டப்படியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு களாக வழக்குரைஞர்களாலும், பொதுமக்களாலும், தமிழக அரசாலும், தமிழ்மொழி பாதுகாப்பு அமைப்புகளாலும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளாலும் வைக்கப்பட்ட கோரிக்கையானது – குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாத நிலையில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இதனால் ஆங்கிலம் தெரியாத வழக்காடிகளும், தாய் மொழியில் வாதிட விரும்பும் வழக்குரைஞர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் தன் வழக்கை வழக்காட வந்த ஒரு வழக்காடியை, தமிழில் வழக்கு நடத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறி இரக்கமற்ற முறையில் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்கு அவசர, அவசியம் கருதி, உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு குடியரசுத் தலைவரையும், அதற்கு விரைந்து ஆவண செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இப்பிரச்சினையில் ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4) சென்னை உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள வழக்குரைஞர் சட்டத்தில் புதிய விதிகள் கடந்த இரண்டு மாத காலமாக தமிழ்நாடு / புதுச்சேரி வழக்குரைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களும், நீதிமன்ற புறக்கணிப்பும் பொதுமக்களுக்கு, குறிப்பாக வழக்காடிகளுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. நீதிமன்ற பணிகளும், வழக் குரைஞர்களின் வாழ்க்கையும் விரும்பத் தகாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் பணிகள் மதிப்பிற்குரிய வகையில் நடைபெற வேண்டும் என்பது நீதிமன்றத்தின் பொறுப்பு என்ற நிலையில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இத்தகைய ஒரு சட்டம் தமிழ்நாட்டில் மட்டும் கொண்டுவரப்படுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்பதையும், தவறு செய்யும் வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கெனவே போதிய சட்டங்கள் உள்ள நிலையில், அதற்கு உரிய அதிகாரம் பெற்ற ‘பார்கவுன்சில்’ போன்ற அமைப்புகள் சரியாகவும், பாரபட்சமின்றியும், சட்டப்படியும் நடவடிக்கை எடுப்பது தான் அதற்கான தீர்வாக இருக்க முடியுமே தவிர, வழக்குரைஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நீதிபதிகள் கையில் எடுத்துக் கொள்வது – சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதிமன்றம் கைப்பற்றிக் கொள்வதாக ஆகும் என்பதை இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.

பிரச்சினைக்குரிய வழக்குரைஞர் சட்டத்தின் புதிய விதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இந்த சட்டத்தின் புதிய விதிகளை எதிர்த்துப் போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள் 126 பேரை இடைநீக்கம் செய்த நடவடிக்கையை இந்திய பார் கவுன்சில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. நீதிமன்றத்திற்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவ வேண்டியது பொது நலக் கண்ணோட்டத்தில் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, மேலும் இரு தரப்பிற்கும் இடையில் நிலவும் விரிசலைத் தவிர்க்கவும், உறவை சீரமைக்கவும் உரிய தெளிவையும், நெறிமுறைகளையும் பெறுவதற்கு சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு இப்பிரச்சினையை உட்படுத்தி, ஆணையத்தின் ஆலோசனையைப் பெறுமாறு இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்சினையை உடன டியாக முடிவுக்குக் கொண்டு வர அவரவர் தரப்பில் இருந்து முயற்சி செய்யுமாறு அனைத்துத் தரப்பினரையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Response