குருவிகளுக்கு தானியம் தமிழர்களுக்கு இளையராஜா – தேனிகண்ணன் நூல் வெளியீட்டுவிழா

ஜூன் 26 ஆம் தேதி மாலை இதழாளர் தேனிகண்ணன் எழுதிய வசந்தகாலநதிகளிலே நூல்வெளியீட்டுவிழா நடந்தது. அந்நிகழ்வு பற்றி எழுத்தாளர் சுந்தரபுத்தனின் பகிர்வு….

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட தேனி கண்ணன் எழுதிய வசந்தகால நதிகளிலே… வாசிப்புப் பகிர்வு அனுபவக் கூட்டம் வருகைதந்த அனைவருக்கும் சுவையான அனுபவமாக அமைந்தது.

வரவேற்புரையாற்றிய விஜய மகேந்திரன், “சிலோன் விஜயேந்திரன், கவிஞர் முத்துலிங்கம், இசைஞானி இளையராஜா, விவேக் போன்றவர்களின் நற்பண்புகளைப் பற்றி எழுதியிருக்கிறார் கண்ணன்” என்று பாராட்டினார்.

நட்புரையில் ‘ஒன் இந்தியா’ இணையதள ஆசிரியர் ஷங்கர், ஒரு வார்த்தையைக் கூட கண்ணன் கூடுதலாக கட்டுரைகளில் பயன்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டினார். “மிக அழகாக கதை சொல்லத் தெரிந்தவர். அடுத்து ஒரு கதையை எழுதவேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் சீனு ராமசாமி, “எந்த விழாக்களிலும் கலந்துகொள்ளாமல் கரப்பான் பூச்சி போல ஒதுங்கி வேலைகளை செய்துகொண்டிருந்தேன். மன அழற்சியே அதற்குக் காரணம். ஆனால் கண்ணன் கேட்டதும் தட்டமுடியவில்லை” என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார்.

“எல்லோரும் பிறந்த ஊரைத்தான் பெயருடன் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் கண்ணன் வளர்ந்த ஊரை வைத்திருக்கிறார். தஞ்சை கண்ணன் தேனி கண்ணனாக மாறியிருக்கிறார். இனிமேல் என் பிறந்த ஊர் சென்னை என்றுதான் சொல்வேன். அதுதான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. நம் ஞாபகங்களில் பால்ய கால கிராமம் இருக்கும். ஊர் நம்மை இன்னார் பையனாக பார்க்கும். சீனிவாசனாக பார்க்கும். பொருளாதாரமாக பார்க்கும். சாதியாக பார்க்கும். ஆனால் சென்னையோ சீனு ராமசாமியாக பார்க்கிறது.

கலைஞர்களின் நல்லியல்புகளை கண்ணன் எழுதியிருக்கிறார். குருவிக்கு தானியம் எப்படி முக்கியமோ அப்படி தமிழர்களுக்கு முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல்களில் நம் நினைவுகளின் தடம் இருக்கிறது. ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும் பல பாடல்களுக்கு தொடர்பிருக்கிறது. பயணங்களில், இரவுகளில், தனிமைப் பொழுதுகளில், உற்சாகம் குறைந்த நேரங்களில் இசைஞானியின் பாடல்கள் தேவைப்படுகின்றன” என்று கவித்துவமாகப் பேசினார்.

இயக்குநர் கரு. பழனியப்பன், மேடையில் பேசுவதை செஸ் விளையாட்டுக்கு ஒப்பீடு செய்தார். “அடுத்த எந்த காயை நகர்த்துவார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் நமக்கு முன்னே பேசியவர்கள் நாம் பேச வைத்திருந்த கருத்துகளை பேசிவிடுவார்கள்.. கடைசியில், நமக்கு என்ன பேசுவது என்றே தெரியாது” என்று கலகலப்பூட்டினார்.

“எழுதுவதில் மயக்கம் இருக்கிறவர்கள்தான் பத்திரிகை வேலைக்கு வருகிறார்கள். ஆனால் பத்திரிகையில் சேர்ந்தவுடன் அவர்களை எழுதுவதற்கு வாய்ப்புகள் அற்றவர்களாக செய்துவிடுகிறது. பத்திரிகையாளர்கள் எழுதவேண்டிய அவசியம் என்ன? யாரும் அறியாத பிரபலங்களின் இன்னொரு பக்கம் அவர்களுக்குத்தான் தெரியும். கவிஞர் முத்துலிங்கம் பற்றி கண்ணன் எழுதியதைப் படித்ததும் அவரைப் பற்றிய சுவையான இன்னொரு பக்கம் தெரியவந்தது” எனக் குறிப்பிட்ட கரு பழனியப்பன், மனித மனங்களின் மேன்மைகளைப் பற்றி தேனி கண்ணன் எழுதியிருக்கிறார்” என்றார்.

நிறைவாகப் பேசிய கவிஞர் முத்துலிங்கம், எம்ஜிஆர் காலத்தில் பாடல் எழுதிய அனுபவங்களை நகைச்சுவையாகக் கூறி அனைவரையும் சிரிப்புக் கடலில் மூழ்கடித்தார். அந்தப் பேச்சை கேட்டவர்கள் பாக்கியவான்கள். அப்படியொரு சுவையான பேருரை.

இந்நிகழ்ச்சிக்குப் பின் தேனிகண்ணனின் உணர்வுப் பதிவு….

நூல்வெளியீட்டு நிகழ்வு எனக்கு வித்தியாசமான அனுபவம் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பொதுவாக ஒருவர் வீட்டு விஷேசங்களுக்குக்கூட போகாமல் இருக்கலாம். ஆனால் படைப்பு ரீதியாக அடுத்த கட்டத்துக்கு போகும் நண்பனை வாழ்த்த போகாமல் இருக்க்கூடாது என்ற அக்கறையில் விழாவுக்கு வந்த அத்தனை நண்பர்கள் கைகளில் முத்தமிடுகிறேன்.
திரு முத்துலிங்கம் திரு.சீனு ராமசாமி, திரு.கரு.பழநியப்பன் திரு.ஷங்கர் திரு.விஜய மகேந்திரன் ஆகியோர் பேசிய கருத்துக்கள் என்னை இன்னும் அதிகமாக ஓட வைக்கும்.
அன்புத்தோழி ரோகிணி வண்ணாரப்பேட்டையிலிருந்து எனக்காக வந்து நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்தார். அந்த அன்பு மறக்க முடியாதது.
டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்[பன் திரு சுந்தரபுத்தன் ஆகியோர் எனக்கு பலமாக இருக்கின்றனர். இந்த உற்சாகத்தில் என் அடுத்த புத்தகத்தை எழுத ஆரம்பித்து விட்டேன். விரைவில் ஈரோடு புத்தக சந்தையில் வெளியிடுகிறார் திரு.வேடியப்பன். அனைவருக்கும் நன்றி
’தமிழ் சினிமாவின் தாதா சாகிப் பால்கே’ இதுதான் டைட்டில்.

இவ்வாறு தன் மகிழ்வை வெளிப்படுத்தியுள்ளார் தேனிகண்ணன்.

எழுத்து வளமும் இன்முகமும் அபார தன்னம்பிக்கையும் கொண்ட தேனிகண்ணன் தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்க வாழ்த்துகள்.

Leave a Response