
உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னோடி பல்கலைக் கழகம் ஹார்வர்டு. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு இல்லாத துறைகளே இல்லை எனலாம். ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை.
இங்கு மேற்கொள்ளப்பட்டு, நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி முடிவுகளை ஹார்வர்டு பல்கலைக் கழகம் வெளியிடும்போது அவற்றை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக் கொள்வது வரலாறு. இப்பல்கலையில் முன்னாள் மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் என 47 பேர் கடந்த நூற்றாண்டுகளில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் என்றால் அதன் அறிவுச்சாரத்தைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ் இருக்கை என்றால் என்ன ?. எதற்காக அது அமைக்கப்பட வேண்டும் ?
உலகெங்கும் சுமார் 10 கோடித் தமிழர்கள். உலகின் பெரிய இருபது மொழிகளில் தமிழும் அடக்கம். உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. எனினும் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப் படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும்.
நமது பண்டைத்தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.
பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக் கழகங்களில் தமிழைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும் போது இந்தப் போதாமைகள் சீர் செய்யப்படும். ஓர் உலகப் பல்கலையில் இதற்கான துறை அமையும் போது, அதற்குத் ‘ தமிழ் இருக்கை ‘ என்று பெயர். இந்த அடிப்படையில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட உள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த இருக்கை அமைய ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ 40 கோடி) தேவைப்படுகிறது. இந்தத் தொகையில் முதல் ஒரு மில்லியன் டாலர்களை அமெரிக்கத் தமிழர்களாகிய மருத்துவர்கள் ஜானகிராமனும் திரு திருஞான சம்பந்தமும் அளித்துத் துவக்கி வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள தொகையை உலகெங்கும் உள்ள தமிழர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற முடிவு செய்யப் பட்டது.
பெருமைமிக்க இந்த இருக்கை அமையும்போது அதற்கான பங்களிப்பு உலகத்தின் அனைத்துத் தரப்புத் தமிழர்களிடமிருந்தும் வரவேண்டும், அனைவருக்கும் இந்த இருக்கையில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற மேலான நோக்கமே , அனைவரும் நிதி தருக என்று அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பல தமிழறிஞர்களும் கவிஞர்களும் இதற்காகப் பாடுபட்டார்கள்.
இவ்வளவுக்குப் பிறகு இப்போது. ஜுன் 25 ஆம் தேதி, தமிழ் இருக்கையின் தேவை விளக்கம், தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீடு, அறக்கொடை அறிமுகம் ஆகிய மூன்றையும் இணைத்து, தமிழன்னைக்கு சென்னையில் முப்பெரும்விழா என்று நடத்தவிருக்கிறார்கள்.
சென்னை தியாகராய நகரில் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகிப்பவர் இந்து என்.ராம்.
இதைப்பார்த்ததும் நெஞ்சம் அதிர்கிறது. காலங்காலமாகத் தமிழை எதிர்ப்பதையும் தமிழர்களை வஞ்சிப்பதையுமே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கும் இந்துராம் தலைமையில் தமிழன்னைக்கு விழாவா?
தமிழின உரிமைகள் மற்றும் தமிழீழம் ஆகியனவற்றில் இந்துராமின் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததுதானே? இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களுக்கு மட்டும் அது தெரியாமல் போனதெப்படி? என்கிற கேள்வி தமிழார்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ் இருக்கை தமிழர்களுக்கானதா? நோக்கத் தெளிவுள்ளதா? தமிழ்க்குருதி குடிப்பவர்களை உள் அழைத்து இருக்கையைக் கறை செய்வார்களா? இரண்டாயிரம் ஆண்டுகாலம் தமிழை நீசபாஷை என்பவர்களுக்கே இருக்கை எனில் தாயே தமிழே உன்னை எப்படியம்மா காப்போம்? என்று தமிழின வலியாளர்கள் துடிக்கின்றனர்.
நிகழ்ச்சியை வடிவமைத்தவர்கள் இக்கேள்விகளுக்கு விடை சொல்லியாக வேண்டும்.
