மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது – யாழில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேதனை

ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் வெற்றியடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள்.

இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது மட்டும் போதாது. மாணவன் வாழ்க்கையிலும் நல்லதொரு மனிதனாக வெற்றிபெற வேண்டும்.

இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாகவும் திகழவேண்டும் என்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிசன் வித்தியாலயத்தின் புதிய மாடிக் கட்டிடத் திறப்பு விழா  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் ஒழுக்க விழுமியங்கள் சிதைந்து பல்வேறு சமூகப் பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இதனை, நீண்டகாலமாகப் போருக்குள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் சிதைவாகப் பார்ப்பவர்களும் உண்டு. எமது இளைய தலைமுறையினர் திட்டமிட்டு தவறான பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

காரணங்கள் எவையாக இருந்தாலும், எமது மாணவர்கள் தவறான பாதையில் செல்வது தடுக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் தங்கள் பெரும்பகுதி நேரத்தை ஆசிரியர்களுடனேயே செலவிடுகிறார்கள். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்துவதில் மிகப் பெரும் பங்காற்ற முடியும்.

பாடப் புத்தகங்களுக்கு மேலாக வாழ்வாங்கு வாழ்ந்த சமூகப் பெரியோர்கள் பற்றி, இலட்சியவாதிகள் பற்றி மாணவர்களிடையே எடுத்துச் சொல்லி அவர்களை இலட்சிய புருஷர்களாக வளர்ப்பதற்குத் தூண்ட முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்களும் மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாக ஆகமுடியும். தங்கள் நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என்று எல்லாவற்றிலும் நேர்பட வாழும் ஆசிரியர்களை மாணவர்கள் தங்கள் இலட்சிய வழிகாட்டிகளாக இலகுவில் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிசன் வித்தியாலய அதிபர் யோ.ஜெகானந்தம் தலைமையில் நடைபெற்ற கட்டிடத் திறப்பு நிகழ்ச்சியில் யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா, உதவிக் கல்விப்பணிப்பாளர் கே.மைதிலி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Leave a Response