அதிமுகவின் ஒரு தரப்பை விஜய் சந்தித்தது சட்டப்படி தப்பு – விமர்சனங்கள்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 47 இடங்களில் வென்ற அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதன் காரணமாக அக்கட்சி எடப்பாடி பழனிச்சாமி அணி, சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி என இரு பிரிவுகளாகச் செயல்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமியை சட்டப்பேரவைக் குழு தலைவராக்க 17 சட்டமன்ற உறுப்பினர்களும், வேலுமணியை தலைவராக்க 30 சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவைத்தலைவரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.அந்தத் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது.

தேர்தலுக்குப் பிறகு திமுக ஆதரவோடு, தன்னை முதல்வராகத் தேர்வு செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பழனிச்சாமி கூறினார். இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சம்மதிக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பு இருந்த எந்தக் கூட்டணியிலும் இனி அதிமுக இருக்காது. இந்தக் கட்சி காப்பாற்றப்பட வேண்டும்.புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.அந்த தீர்மானத்தின்படி,தற்போது வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினார்.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பிரிவு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அதிமுக – திமுக கூட்டணி என்ற ஊடக வதந்திகளை நம்பிய நீங்கள், அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் தவெகவிடம் அமைச்சர் பதவிக்கு மண்டியிட்டுக் கிடப்பதாகச் செய்திகள் வருவதையும் ஏற்கிறீர்களா? என சி.வி.சண்முகம் தரப்புக்கு அதிமுக தலைமை வினவியுள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்துக்கு வந்த முதல்வர் விஜய்யை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர்,கே.பி.அன்பழகன்,இரா.காமராஜ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் விஜய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார்.

அதிமுகவின் இரண்டு அணிகளும் நாங்கள்தான் உண்மையான அதிமுக எனவே எங்களுக்கே சட்டமன்றக் குழுத்தலைவர் மற்றும் கொறடா பதவிகளைக் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் விஜய், ஒரு தரப்பினரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தீர்ப்பு சொல்லவேண்டிய நீதிபதி நிலையில் இருப்பவர்,தீர்ப்புக்கு முன்பே இரண்டில் ஒரு தரப்பைச் சந்தித்திருப்பது சட்டப்படி தப்பு என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response