எல்.கே.ஜி க்கு இரண்டுஇலட்சம் வசூலிக்கும் கல்விக்கொள்ளையைத் தடுக்க புது அமைப்பு

கல்வி மூலமே மக்களின் நல்வாழ்க்கைக்கு வேண்டிய சமூகத்தின் நல்வளர்ச்சிக்கு வேண்டிய அறநெறிகளைப் போதிக்க முடியும். கடைக்கோடி மனிதர்களை முன்னேற்ற முடியும். ஆனால் கல்வி அமைப்பே அறநெறியற்றுப் போய்விட்ட நிலையை நாம் இன்று பார்க்கிறோம். கடைக்கோடியில் வாழும் குழந்தைகளை கல்வி அமைப்பு மூன்றாம் தரமாக நடத்துவதைப் பார்க்கிறோம். இதற்கான சாட்சியங்களை இந்த அறிக்கையில் தெளிவாககக் கூறியிருக்கிறோம்.
ஒரு சமூகத்தில் கல்வி அமைப்பு மட்டும் தனித்து அறநெறியோடு இருந்துவிட முடியாது. சமூக, அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அதற்கு இடம் கொடுக்கவேண்டும். மாற்றத்திற்கான பணியை நாம் கல்வியில் இருந்து தொடங்குவோம்
கண்ணகிநகர் சிறுவனை காவல் துறை நடத்தியது மட்டும் மனித உரிமை மீறல் அல்ல. ஏழைக் குழந்தைகளுக்கு வகுப்புக்கு ஒரு ஆசிரியர், படத்திற்கு ஒரு ஆசிரியர் இல்லாமல் பாடம் போதிப்பதும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பாட ஆசிரியர், கணிதப் பாட ஆசிரியர் இல்லாமல் பொதுத்தேர்வு எழுத வைப்பதும் பணக்காரக் குழந்தைகள் படிக்கின்ற பள்ளிக்குள் ஏழைக் குழந்தைகள் நுழைய முடியாததும்ஏழைகளுக்கு ஒரு பள்ளி பணக்காரக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளி என்று இருப்பதும் எல்.கே.ஜி. கல்வியை 2 இலட்சம் ரூபாய் வரை விற்க அனுமதிப்பதும்இவைகள் எல்லாமே மனித உரிமை மீறல் தான்.இவைகள் எல்லாமே குழந்தை உரிமை மீறல் தான்.
நாட்டின் கறுப்புப் பண உற்பத்தியில் கல்வி வணிகம் மூன்றாவது துறையாகப் பங்காற்றுவது மிகப்பெரிய சாபக்கேடு. கல்வி வணிகத்தை ஒழிக்காமல் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. சமூகத்தில் நிலவும் அனைத்து அவலங்களையும் சாதிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கல்வி அமைப்பிலும் பள்ளிகளிலும் எதிரொளிக்கச் செய்வதும் அதைத் தடுப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதும் ஒரு மக்களாட்சி நெறிமுறை உள்ள நாட்டின் அடையாளமாக இருக்கவே முடியாது.
எப்படியாவது பணத்தைச் சேர்த்தால் போதும் என்ற நிலை எல்லா இடங்களிலும் அப்பட்டமாக இருக்கும் நிலையில் சமூகத்தில் எந்த மூலையிலும் அறநெறிக்கு ஒரு துளியும் இடமிருக்காது. எப்படிப் பணம் சேர்ப்பது என்பதை தொடக்கக் கல்வியில் இருந்தே சொல்லிக்கொடுக்கிறோம். அதனால் தான் தொழில். மதம், அரசியல், கலை, கல்வி எதிலும் அறநெறி இல்லாமல் போய்விட்டது. குத்து, வெட்டு, கொலைகளின் உற்றுக்கண்களாக இவைகள் மாறிவிட்டதைப் பார்க்கிறோம். எல்லாமே லாப நலன்களுக்கான ஏதுக்களாக பயன்படுத்தப்படுகின்றன.
உலக யோகா நாளைக் கொண்டாடவேண்டும் என்று வழிகாட்டிய நாம் தனியார் யோகா மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகளை சாகடித்திருக்கிறோம். தனியார் கல்வி வணிகத்தின் கொடுமைக்கு இதைவிட இன்னும் என்ன சாட்சி வேண்டும். ஆனால் நாம் கொதித்து எழவில்லை. தில்லியில் ஒரு மருத்துவ மாணவி சாகடிக்கப்பட்டதற்கு கொதித்தோம். சிறுவர் நீதிச் சட்டத்தையே திருத்தி சமாதானம் ஆகிக்கொண்டோம். ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மருத்துவ மாணவிகள் கல்வி வணிகர்களால் உயிரிழந்தார்கள். இங்கு எந்த சட்டமும் மாறவில்லை. இதை மறக்கக் கூடாது என்பதற்காகத் தான், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு மருத்துவ மாணவிகள் உயிரிழந்த நாளை கல்வி வணிக ஒழிப்பு நாளாக அறிவித்துள்ளது.

கல்வி அமைப்பை தூய்மையான, அறநெறி கொண்ட அமைப்பாக மாற்றாமல் நாட்டில் நாம் எந்த மாற்றத்தையும் செய்யவே முடியாது. கல்வி அமைப்பில் வணிக சக்திகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கும் நிலையை ஒழிக்கவேண்டும். இந்தப் பணியை குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறையுள்ள, அரசியல் உறுதிப்பாடுள்ள அரசியல் கட்சிகளால் மட்டும் செய்ய முடியும். கல்வி அமைப்பில் உள்ளவர்களோடு ஊடகத்துறையினரும் சேர்ந்து போராடினால மட்டுமே உடனடியாக இல்லை என்றாலும் மெதுவாகவாவது இந்த மாற்றங்கள் நடக்கும்.
இந்த மாற்றத்தை செய்ய விருப்புவர்களுக்கான ஒரு கையேடாக இந்த மக்கள் கல்விப் பறைசாற்ற அறிக்கை அமையும் என்று நம்புகிறேன். கல்வியில் நல்லதொரு மாற்றத்தை செய்ய விரும்பும் கட்சிகளுக்கு முதன்மையாக இந்த அறிக்கை பயன்படவேண்டும். இந்த மக்கள் கல்விப் பறைசாற்ற அறிக்கையில் சொல்லப்பட்ட கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். தேர்தல் களத்தில் மக்களிடம் இருந்தும் இந்தக் கோரிக்கைகளை எதிரொலிக்கச் செய்யவேண்டும்.
கல்வியில் வணிகமயத்தை ஒழிப்போம் !

மழலையர் கல்வி முதற்கொண்டு பட்ட மேற்படிப்புக் கல்வி வரை தரமான கட்டணமில்லாக் கல்வி வழங்குவோம்!!
தாய்மொழி வழிக் கல்வியை மீட்டெடுப்போம்!!
மக்களாட்சி நெறியுடைய கல்வி அமைப்பை உருவாக்குவோம்!!!
என்ற உறுதி மொழிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவேண்டும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்.
அன்புடன் ….

(சு. மூர்த்தி)
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
பேசி: 9965128135, 9487995084.
மின்னஞ்சல்: moorthy.teach@gmail.com.

Leave a Response