இந்தத் தேர்தலில் பணமா? தமிழ் இனமா? என்கிற போட்டி நிலவுகிறது – கடலூர் பரப்புரையில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சீமான், கடலூரில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

பிரசாரம் தொடக்கம்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதன்படி, 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். இதில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் சீமான் நேற்று கடலூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். கடலூர் உழவர் சந்தை அருகில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்.

ஆதரவு திரட்டினார்

தொடர்ந்து பூ மார்க்கெட், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களிடமும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு பஸ் நிலையம், லாரன்ஸ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள கடைக்காரர்கள், பொதுமக்களிடமும் ஆதரவு திரட்டினார்.

முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்று அரசியல்

பல ஆண்டுகளாக தமிழர்கள் இந்த தமிழகத்தை ஆளாமல், தங்களுக்கு அரசியல் வலிமை இல்லாமல், உரிமைகள் இல்லாமல், அடிப்படை உரிமைகளை பறிகொடுத்து, கடைசியில் உயிரையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தமிழ் பிள்ளைகளுக்கு சாதி, மத, உணர்வுகளை தாண்டி, தமிழ் தேசிய உணர்வு தான் முக்கியம் என்பதை உணர்த்தி, மாற்று அரசியல் படைக்க உள்ளோம்.

அதற்கு வாய்ப்பாக இந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மற்றவர்களுக்கு இது வழக்கமான தேர்தல், எங்களுக்கு அடிப்படை தேசிய இனத்தின் உரிமை மீட்சிப்போர். மக்களை நம்பி, மக்களின் உரிமைக்காக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். தானேபுயல், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மண்ணில் நான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் பணமா? தமிழர் என்கிற இனமா? அந்த இனத்தின் மானமா? என்கிற போட்டி நிலவ இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறந்த மக்களாட்சியை தருவோம். புதிய கட்சி தொடங்கியதே திராவிட கட்சிகளுக்கு மாற்றாகத்தான். அதனால் தான் யார் தலைமையையும் ஏற்கவில்லை.

தமிழர்களே ஆள வேண்டும்

ஊழல், லஞ்சம் இல்லாத நாடாக மாற்றுவோம். நாங்கள் யாருக்கும் போட்டி இல்லை. அதனால் புதிய வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளோம். அனைவருக்கும் கல்வி, சுத்தமான குடிநீர், தரமான மருத்துவம், தொடக்கக்கல்வி, சுகாதார வசதி ஏற்படுத்தி தருவோம். திராவிட கட்சிகள் அழிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும்.

மதுவை கொண்டு வந்த தி.மு.க.வே தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Response