எங்கள் நிலங்கள் எங்களுக்கு வேண்டும் – சிங்கள இராணுவத்துக்கு எதிராக தமிழ்மக்கள் போராட்டம்

‘நம்புங்கள் சத்தியமாக இலங்கையில் நல்லாட்சி தான் நிலவுகிறது! இலங்கை அரசு தமிழர்க்கு நல்லது தான் செய்கிறது” என வெட்கமின்றி வாலாட்டி கூவும் நம்மவர்கள் குருட்டு பார்வையில் இந்தக் காட்சிகள் எங்கு தெரியப் போகின்றன?!!

இன்று தமது சொந்த இடத்தில் முல்லைத்தீவு- கேப்பாபிலவு மாதிரிக்கிராம மக்கள், தம்மை தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரி இன்று காலை பத்து மணிக்கு கேப்பாபிலவு மாதிரிக்கிராம பிள்ளையார் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மக்களை சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றி விட்டு தமிழர் நிலங்களில் இராணுவம் முகாமிட்டு குடியமர்ந்து தமிழர் நிலங்களில் விவசாயம் செய்கிறார்கள், புத்தர் சிலைகள் எழுப்புகிறார்கள். சிங்கள தேசங்களை எங்கள் நிலங்களில் கட்டி எழுப்புகின்றார்கள்.

“இராணுவத்தினர் வேண்டுமானால் காடுகளில் இருக்கட்டும் எமது 520 ஏக்கர் காணிகளை எம்மிடம் கையளிக்க வேண்டும்” என்று கூறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தமக்கு ஜனாதிபதியினுடைய எழுத்துமூல உறுதிமொழி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடருமென தெரிவித்தனர்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீகக் காணிகள் தற்போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதற்கு மாற்றீடாக கேப்பாபிலவு மாதிரிக் கிராமமென 20 பேர்ச் காணிகளை வழங்கி தம்மை சிறைக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஐந்து, பத்து ஏக்கர் காணிகளில் சுதந்திரமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி என சொந்தத் தொழில் செய்த தாம், தற்போது தொழிலற்ற நிலையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே தமக்கு எந்தவித காரணமும் கூறாது, நல்லாட்சி அரசாங்கம் தமது காணிகளை உடனடியாக விடுதலை செய்து தமது சொந்த நிலத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்றும் உறுதியாக கேட்டு இருக்கின்றார்கள்.

கோப்பாபிளவு மக்களுக்கு நீதி கிடைக்க உலகத் தமிழர்கள் நாம் குரல் கொடுப்போம்.

.

Leave a Response