நாம் தமிழர் ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 25 பைசா – சீமான் உறுதி

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டின் தலைநகரமாக திருச்சி மாற்றப்படும் என்றும், சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டுப்பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் கட்சியின் செயல்பாட்டு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டு வரைவு அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘‘மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!’’ என்ற தலைப்பில் ‘நாம் தமிழர் ஆட்சி செயல்பாட்டு வரைவு’ அறிக்கை வெளியிடப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இதை வெளியிட்டார்.
314 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்ததும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் வருமாறு:-

திருச்சி தலைநகரம்
* ‘தலைநகரை மாற்றுவோம் தமிழகத்தையே மாற்றுவோம்’ என்ற தலைப்பில் நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சியை பரவலாக்குவதற்காகவும், செயலாண்மை வசதிக்காகவும் திருச்சி தமிழ்நாட்டின் தலைநகராக மாற்றப்படும். ஒரு நாட்டின் மையப்பகுதியில் தான் தலைநகரம் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் திருச்சி தலைநகராக மாற்றப்படும்.
* திரைக்கலை, துறைமுகம், கணினி தொழில்நுட்பத்திற்கான தலைநகராக சென்னை விளங்கும், தொழில், வர்த்தகத்திற்கான தலைநகராக கோவை விளங்கும், மொழி, கலை, பண்பாட்டிற்கான தலைநகராக மதுரை விளங்கும், தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரி விளங்கும்.
* ரசாயன வேளாண்மையை முற்றிலுமாக தடை செய்து இயற்கை வேளாண்மை மீட்டெடுக்கப்படும். வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.
* நாம் தமிழர் அரசில் குடிக்கத் தூய குடிநீர், கல்வி, மருத்துவம் இந்த 3 மட்டுமே கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

* கல்வி அதற்கேற்ப வேலை வாய்ப்பு, அதற்கேற்ப ஊதியம், அதைக் கொண்டு பெருமைக்குரிய வாழ்க்கை இதுவே நாம் தமிழர் கட்சியின் லட்சியம்.
மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்
* நாம் தமிழர் அரசில் உயர் அதிகாரப் பதவிகளான உள்துறைச் செயலாளர், தலைமை செயலாளர், மாவட்ட நிர்வாகம் போன்ற அனைத்து பதவிகளிலும் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
* அரசு ஊழியர்களாக இருக்கும் கணவன்-மனைவி இருவருக்கும் ஒரே இடத்தில் பணி இடமாற்றம் வழங்கப்படும். பகுதி நேர, தற்காலிக ஊழியர்கள் அனைவரும் நிரந்தர அரசு

ஊழியர்களாக்கப்படுவார்கள்.
* மீனவ மக்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். எனவே இவர்களை பாரம்பரிய பழங்குடியினர் இனத்தில் சேர்க்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். மத்திய அரசுடன் போராடி பெற்று தரும்.
* மீனவர்களின் மீன்பிடிப்பு உரிமையை நிலைநாட்டவும், கச்சத்தீவுப் பகுதியில் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மது, புகையிலை தடை செய்யப்படும்
* அரசுப்பள்ளிகளில் தாய்மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் அவரவர்

வாழ்விடங்களுக்கு அருகிலேயே தொடக்கப்பள்ளிகள் ஏற்படுத்தித்தரப்படும். மாணவர்களின் ஆராய்ச்சிப்படிப்புகளுக்கான உதவித்தொகைகள் உயர்த்தப்படும்.
* நாம் தமிழர் அரசு மதுவையும், புகையிலைப்பொருட்களையும் முற்றிலும் தடை செய்யும். மதுவால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க மாவட்டம் தோறும் மனநல கலந்தாய்வு மையங்கள் நடத்தப்படும்.
* வீடுகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். ஒரு யூனிட்டுக்கு 25 பைசா மட்டுமே வசூலிக்கப்படும்.

* சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும். இங்கு சர்வதேச அளவில் சிறந்த விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். விளையாட்டுத் துறையில் உயர் ஆராய்ச்சி படிப்புகளும் மேற்கொள்ளப்படும்.
* உழவர்களுக்கென தனியாக வாரியம் அமைக்கப்படும். அவர்களின் சிக்கல்கள் தீர்க்கப்படும். உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நலவாரியமே ஒரு விலையை நிர்ணயிக்கும். விவசாயிகள் நலனுக்குண்டான அனைத்து மாற்றங்களையும் கொண்டு வருவோம்.
* ஆரம்ப சுகாதார நிலையம் முதல் உயர் சிறப்பு மருத்துவமனை வரையிலும் வெளி நோயாளிகள் பிரிவு 24 மணி நேரமும் செயல்படும்.
* கோவை, மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் புதிய தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படும். மேலும், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் நெசவுத் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
* அனைத்து விதமான ரசாயன குளிர்பானங்கள் தடை செய்யப்படும். அதற்கு மாற்றாக இளநீர், பழச்சாறு, பதநீர், நுங்கு போன்றவை ரசாயன கலப்பில்லாமல் ஏற்றுமதி செய்வதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

* பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை தயாரிக்கப்பட்டு சர்க்கரைக்கு மாற்றாக வினியோகிக்கப்படும்.
* பனங்கிழங்கிலிருந்து அல்வா, மிட்டாய் போன்ற இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யப்படும்.
இவற்றைப் போல பல்வேறு திட்டங்கள் அந்த செயல்பாட்டு வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயல்பாட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டு சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னோடி மாநிலமாக…
திராவிடக் கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு தமிழ்நாட்டில் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை அமைப்பதே எங்கள் லட்சியம். தமிழ்நாட்டில் முற்றிலும் புதுமையான ஆட்சியை உண்டாக்குவோம். தமிழக அரசு முத்திரை மாற்றப்படும், அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்ட எங்களால் முடியும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் முற்றிலும் வித்தியாசமான நல்ல ஆட்சியை தமிழக மக்கள் அடைவதோடு, அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response