சிலம்பரசன் அப்துல்மாலிக்கை உடனே விடுதலை செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை

கர்நாடகத் தமிழர்களைத் தாக்கும் கன்னட இன வெறியர்களைக் கண்டித்தது குற்றமா? சிலம்பரசன் – அப்துல்மாலிக் இருவரையும் விடுதலை செய்க என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

கர்நாடகத்திலிருந்து கேரளத்தின் சபரிமலை வழிபாட்டிற்காக ஈரோடு வழியாக ஊர்திகளில் பயணம் செய்த கன்னடர்கள்,ஆள் உயரக் கன்னட இனக் கொடிகளைக் கட்டிக்கொண்டு 14.1.2026 அன்று போயுள்ளார்கள்.இதுபோல் தமிழ் மூவேந்தர் சின்னங்கள் பொறித்த தமிழ்க்கொடியைக் கட்டிக்கொண்டு தமிழர்கள் கர்நாடகத்திற்குள் பயணம் செய்ய முடியாதே என்று எண்ணிப் பார்த்தும் – கர்நாடகத்தில் நடந்த தமிழினப் படுகொலைகள் – தமிழர்கள் பட்ட சித்திரவதைகள் – அவமானங்கள் அனைத்தையும் மனக்கண்ணில் கண்டும், சனநாயக எழுச்சிக் கழகத் தலைவர் திரு.சிலம்பரசன் அவர்களும், அவ்வமைப்பின் இளைஞரணிப் பொறுப்பாளர் திரு.அப்துல் மாலிக் அவர்களும் கர்நாடக வண்டிகளை நிறுத்தி, கன்னடர் கொடிகளை இவர்களே அகற்றிவிட்டு, போகச் சொல்லி இருக்கிறார்கள்.

இதற்காக ஈரோடு காவல்துறையினர்,சிலம்பரசன்,அப்துல் மாலிக் ஆகிய இருவர் மீதும்,மொழி – இன மதங்களுக்கிடையே வன்முறையைப் பயன்படுத்துவதற்கு எதிரான இந்தியத் தண்டனைச் சட்டம் 196 மற்றும் சமூகங்களிடையே அச்சம் உண்டாக்கும் வதந்திகளைப் பரப்பல் குறித்த இந்தியத் தண்டனைசட்டம் 383 ஆகிய பிரிவுகளின்படி வழக்குகள் போட்டுள்ளனர்.இவ்விரு பிரிவுகளும் பிணை மறுப்புப் பிரிவுகள் ஆகும்.மூன்றாண்டுவரை சிறைத்தண்டனை வழங்குபவை.

மேற்கண்ட இரு பிரிவுகளையும் போடும் அளவிற்கான குற்றச்செயல்கள் எதையும் அவ்விருவரும் செய்யவில்லை. காவல்துறையினர் தலையிட்டுக் கண்டித்து அனுப்ப வேண்டிய செயல்களே அவர்கள் செய்தது.

இச் செயல்களைக் கூட இவர்கள் ஏன் செய்தார்கள்? காவிரிச் சிக்கலை முன்வைத்து 1991 டிசம்பரில் கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் அங்கு காலங்காலமாக வாழும் தமிழர்களை ஏராளமாக இனப்படுகொலைகள் செய்தார்கள். ஆயிரக்கணக்கான தமிழர் வீடுகளை, வணிகர் கடைகளைச் சூறையாடினார்கள்.எரித்தார்கள்.தமிழர்களை அடித்து விரட்டினார்கள்.இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் காடுகள் வழியாக நடந்து தப்பித்துத் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள்.அப்போதைய முதலமைச்சர் செயலலிதா கோபிச் செட்டிப்பாளையத்திலும் இன்னொரு இடத்திலும் அகதி முகாம்கள் உருவாக்கி அவர்களைத் தங்கவைத்தார்.

இனப்படுகொலைகள் செய்த – தமிழர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்ட கன்னட வெறியர்கள் யாரும் முறைப்படி தண்டிக்கப்படவில்லை.உரிய வழக்குகள் போட்டு கைது செய்யப்படவும் இல்லை.

அதன்பிறகு 2016-இல் காவிரிச் சிக்கலை முன்வைத்து மீண்டும் கன்னடர்கள் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர்.சரக்குந்து ஓட்டிச் சென்ற தமிழ்நாட்டு ஓட்டுநரைப் பிடித்து அவர் ஆடைகளை அகற்றி,கோவணம் போன்ற துணி மறைப்புடன் மண்டியிட வைத்து, “காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்” என்று குரல் எழுப்பச் சொல்லி தாக்கினார்கள்.அக்காட்சியைப் படம் பிடித்தும் பரப்பினார்கள்.ஒரு மாதத்திற்கு மேல் கர்நாடக – தமிழ்நாடுகளுக்கிடையே ஊர்திப் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன.

கன்னடர்களின் தமிழ் இன எதிர்ப்பு, காட்டுமிராண்டித்தன வன்முறைகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எதையும் கர்நாடக ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை.அங்கு காங்கிரசு ஆட்சி நடந்தாலும் வேறு கட்சிகள் ஆட்சிகள் நடந்தாலும் கன்னட வெறியர்கள் தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை ஒடுக்கமாட்டார்கள்.

அடிக்கடி கர்நாடகத்தில் ஏதாவதொரு காரணம் காட்டி தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள் கன்னடர்கள்.தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளைத் தாக்குவார்கள்.அண்மையில் தமிழ் நடிகர் கமலஹாசன் உரிமை உறவுடன்,கெட்ட உள்நோக்கம் எதுவுமின்றி தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்று பேசிவிட்டார்.அதற்காகக் கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தி தமிழ்த்திரைப்படங்கள் ஓடாமல் செய்தார்கள்.கமலஹாசனின் புதியபடமும் கர்நாடகத்தில் திரையிட முடியாதவாறு போராட்டங்கள் நடத்தினார்கள்.

இப்போது தமிழ்நாட்டில் கன்னடக் கொடிகளுடன் வந்த கார்களை நிறுத்தி அக்கொடிகளை அகற்றுமாறு கூறியதைப் பெரும் வன்முறைச் செயலாகப் பாவித்து,பிணைமறுப்புப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து,சிறையில் தள்ளியுள்ளது தமிழ்நாடு அரசு!தமிழ்நாடு அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

முதலில் மேற்படி சிலம்பரசன் – அப்துல் மாலிக் ஆகிய இருவரையும் தமிழ்நாடு அரசு சிறையிலிருந்து சொந்தப் பிணையில் விடுதலை செய்யவேண்டும்.பின்னர் இவ்வழக்கைக் கைவிடவேண்டும் என்று தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response