அமித்சாவை புறக்கணிக்கும் எடப்பாடி – கூட்டணியில் சிக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.

அதிமுகவைப் பொறுத்தவரையில், மிகப்பெரிய கூட்டணியை அமைப்பேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். ஆனால் தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரசு ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன.

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறி டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாஜக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை (4 ஆம் தேதி) உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகிறார். மறுநாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்கிறார். அப்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்பட்டு வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி குறித்துப் பேசுவார் எனவும் தகவல் பரவியது.

ஆனால் கடந்த ஒருவாரமாக சென்னையில் முகாமிட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து இன்று பகல் விமானம் மூலம் சேலம் செல்கிறார்.

4 ஆம் தேதி (ஞாயிறு) சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், 5 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடக்கும் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார். குறிப்பாக, 4 ஆம் தேதி மாலை புதுக்கோட்டையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை நிறைவு விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். அதேநேரத்தில்தான் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மறுநாளும் (5 ஆம் தேதி) திருச்சியில் அமித்ஷா பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். அந்த நேரத்தில் சேலத்தில் தங்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி, அன்று மாலை கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் செல்கிறார்.

எனவே, தமிழ்நாடு வரும் உள்துறை அமைச்சரை எடப்பாடி சந்திக்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் சொல்லப்படுவது யாதெனில்? ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்தக்கட்ட முடிவை அறிவிக்க இருந்தார். ஆனால் சசிகலாவின் உறவினர் மூலமாக தொடர்பு கொண்ட டெல்லி பாஜக, அவரது முடிவை 2 வாரம் தள்ளிப்போடுமாறு கூறியது. இதையடுத்து அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அமைதியாகி விட்டார். இதுவரை பாஜக கூறியதை எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை. இதனால் கூட்டணி அமையாத நிலை இருக்கிறது. இம்முறை கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வருகிறார். ஆனால் அவரைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. இதன் காரணமாக அவர் சேலம் சென்றுவிட்டார். அமித்ஷா தங்கியிருக்கும் 2 நாட்களும் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனால் அமித்ஷாவுடனான சந்திப்பு இருக்காது என்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை அறிவிக்கும் நோக்கத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். ஆனால் அவரால் கூட்டணியை அறிவிக்க முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

இப்போதும், கூட்டணியை உறுதி செய்யும் நோக்கத்துடன் வரும் அமித்ஷாவுக்கு அதிர்ச்சி கொடுக்கவே சந்திப்பைப் புறக்கணித்துவிட்டு பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார் எடப்பாடி என்றும் இது, டெல்லி பாஜக தலைமைக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response