
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும்,இந்நாள் திமுக பிரமுகருமான பி.டி.செல்வகுமார் 48 பேருக்கு ஆட்டுக்குட்டிகளையும், அரிசி பைகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
தவெக தலைவர் விஜய் புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களை வைத்துக் கொண்டு தாய்,தந்தையரை ஓரம்கட்டி வருகிறார்.கூடவே இருந்த ஜெயசீலன் உள்பட பலரும் இவருடன் தற்போது இல்லை.தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை. ஏளனமாகப் பார்க்கின்றார்கள்.அங்கு சில மாபியா கும்பல் இருக்கின்றன. புதிதாகக் கட்சியில் இணைந்த ஆதவ்அர்ஜூனா, செங்கோட்டையன் போன்றோரை வைத்து கட்சி நடத்தி வருகிறார்கள். விஜய்க்காக உழைத்தவர்கள் யாருக்கும் தற்போது மரியாதை இல்லை.
தூத்துக்குடி தவெக பிரமுகர் அஜிதா நடிகர் விஜய் முன்னே செல்லும்போது அவரைக் கூட விஜய் பார்க்கவில்லை. ஒரு 3 நிமிடம் அவருக்காக ஒதுக்கி அவரிடம் என்ன குறை என்று கேட்டிருக்கலாம். அந்தநேரத்தில் பின்பக்கமாக ஏறி குதித்துப் போனவர்தான் புஸ்ஸி ஆனந்த்.தற்போது தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார் அஜிதா.ஒரு பெண் அவர் முன்னே சென்று பார்க்கவேண்டும் என்று சொல்லும்போது அவரைப் பார்க்காமல் விஜய் போனால் அவர் யாரைத்தான் பார்ப்பார்.
விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என நடிகை திரிஷாவிடம் கேட்டால்தான் தெரியும். தற்போது வரை பூத் கமிட்டி வலுப்படுத்தவில்லை. இதனால் தமிழக மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளனர்.நடிகை சினேகா, நமீதா போன்றவர்கள் வந்தாலும் கூட்டம் வரும்.இதற்கு முன்னதாக சில்க் ஸ்மிதா வரும்போது கூட்டம் வரத்தான் செய்தது. நடிகர்கள் வந்தால் அனைவருடைய குடும்பமும் வந்து பார்க்கத்தான் செய்யும். இது இயல்பு. இந்தக் கூட்டத்தைப் பார்த்து விஜய் முதலமைச்சராகிவிடலாம் என்று மாயையில் இருக்கிறார். ஆனால் திமுக நல்ல, நல்ல திட்டங்களை அக்கறையோடு செய்து கொண்டு வருகிறது.
தற்போது தவெகவின் 20 மாவட்டச் செயலாளர்கள் என்னிடம் பேசிக்கொண்டு வருகிறார்கள். பொங்கலுக்குப் பின் அவர்களை திமுகவில் இணைக்கும் விழா நடைபெறும். கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியானார்கள். அதில் 39 பேர் பொதுமக்கள். 3 மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு 7 மணிக்கு வந்தது திட்டமிட்ட சதி. இதற்கு முழுப் பொறுப்பும் அவர்தான்.
30 ஆண்டு காலம் அவரோடு இருந்து உழைத்து அவரது வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் நானும் ஒருவன். அவர் கட்சியில் கட்டமைப்பு முழுமையாக இல்லை. நேர்மையும் இல்லை. கூண்டுக்கிளியாக இருந்துகொண்டு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிக்கொண்டு வருகிறார். மக்களுக்கு அவர் யார் என்று தெரியும். அது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும். விஜய் ஒரு கிளாமர். அவரைப் பார்த்துவிட்டுச் சென்று விடுவார்களே தவிர ஓட்டுப் போடமாட்டார்கள்.
இவ்வாறு பிடி செல்வகுமார் கூறியுள்ளார்.
விஜய் கட்சியின் வரவு செலவு கணக்குகளை எல்லாம் த்ரிஷாதான் பார்த்துக் கொள்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் மறைமுகமாகப் பேசப்படுகிறது.அந்தத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பி.டி.செல்வகுமாரின் கருத்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


