
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்தால் தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கரை சேர முடியும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து செங்கோட்டையன் போர்க் கொடி தூக்கினார். அதனால், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஹரித்வார் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற செங்கோட்டையன், தில்லியில் அமித் ஷா மற்றும்
நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார்.
இந்தச் சந்திப்பின் போது, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், ஒருங்கிணைந்த அதிமுகவுடன் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என அமித் ஷாவிடம் செங்கோட்டையன்
வலியுறுத்தியதாகத் தெரிகிறது.அதுமட்டுமில்லாமல், ஓபிஎஸ், தினகரனை தில்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமித் ஷாவிடம் செங்கோட்டையன் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, இருவரையும் தில்லிக்கு அழைத்து பேச பாஜக மேலிடம் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று
வருவதாகவும் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதற்கு முன்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் ஆலோசனை நடத்தவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.இதற்காக அவர் இன்று (11 ஆம் தேதி) தில்லி செல்கிறார். அங்கு அமித் ஷா, ஜெ.பி.நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரைச் சந்திக்கிறார்.
நயினார் நாகேந்திரனிடம் ஆலோசித்த பிறகு ஒபிஎஸ், தினகரன் ஆகியோரை தில்லிக்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தையை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து, பலமான கூட்டணி அமையும் என்று அக்கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்தார் ஓபிஎஸ்.ஆனால் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணி ஓட்டுபோட்டது.அதன்பின், நேற்று ஓபிஎஸ் அளித்த பேட்டியில், அதிமுகவை துண்டாக்கி விளையாடுவதை பாஜக இரசிக்கிறது என நான் எண்ணவில்லை என்றும் தில்லியில் இருந்து இதுவரை எனக்கு அழைப்பு இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.இதுவரை என்று சொல்லியிருப்பதால் இனி வரும் என்கிற பொருளும் அதற்குள் இருக்கிறதென அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இப்படி தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவே பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.
இதனால், விரைவில் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணிக்குத் திரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.


