
சென்னை வருவதற்காக நேற்று மதுரை விமான நிலையம் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறியதாவது….
சி.பி.இராதாகிருஷ்ணன் அனைத்து மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர். அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் என்றார்.
மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவீர்களா அல்லது யாருடன் கூட்டணி அமைப்பீர்கள் என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்,
முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தங்களை அண்ணன் என்று கூறியுள்ளாரே? என கேட்டதற்கு,நான் அண்ணன் என்றால் அவர் எனக்கு தம்பி என, சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
அடுத்த முறை பிரதமர் தமிழ்நாடு வரும்போது உங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் ஓபிஎஸ்.அதன்பின், விஜய்யுடன் கூட்டணி சேர்வீர்களா? எனக் கேட்டபோது,அவருடனான கூட்டணி தொடர்பாக, இதுவரை யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
ஓபிஎஸ்ஸின் இந்தப் பேட்டியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என் தம்பி என்று சொல்லி உறவு கொண்டாடியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஏனெனில்,தென் மாவட்டங்களில் பல முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணக்கமாக இல்லை என்று சொல்லப்பட்டது.அந்நிலையில் அவருடைய தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டவர் ஆர்.பி.உதயகுமார்.இப்போது அவரும் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக்கு மாறாக ஓபிஎஸ் என் அண்ணன் என்று சொல்லி இணக்கம் காட்டியிருக்கிறார்.
இந்த நிகழ்வு, எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியையும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.


