
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபானக்கூடம் ஒன்றில் மே 22 ஆம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக இணைய நிர்வாகி பிரசாத் கைபேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, பிரசாத் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
பிரசாத் ‘தீங்கிரை’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் நாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். இதனால் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு கொக்கைன் என்ற போதைப் பொருளை அடிக்கடி பிரசாத் வாங்கிக் கொடுத்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள பிரசாத் வீட்டில் நடந்த சோதனையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக பல முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதன்படி பிரசாத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்ற பிரடோ (38) மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் (38) என்பவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஜூன் 17 ஆம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் அறிமுகம் செய்து வைத்த பிரதீப்குமார் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் 2023 ஆம் ஆண்டு முதல் 40 முறை அதாவது ரூ.4.72 இலட்சத்திற்கு கொக்கைன் வாங்கிப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. ஒரு கிராம் கொக்கைன் ரூ.12 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அதற்கான பணத்தை ஸ்ரீகாந்த் தனது ஜி-பே மூலம் பிரதீப்குமாருக்கு அனுப்பி உள்ளார்.
அதைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியில் வசித்து வரும் நடிகர் ஸ்ரீகாந்தை பிடித்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அவர் முன்னணி நடிகர் என்பதால் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் ஸ்ரீகாந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவரை நேற்று முன்தினம் இரவு அதிரடியாகக் கைது செய்தனர்.
ஸ்ரீகாந்திடம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், ஸ்ரீகாந்த் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஸ்ரீகாந்த் தனது படுக்கை அறையில் துணிகளுக்கு இடையே கொக்கைன் பயன்படுத்திய 7 காலி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த பாக்கெட்டுகளில் சிறிது அளவு கொக்கைன் இருந்தது. அதை மொத்தமாகச் சேகரித்துப் பார்த்தபோது, ஒரு கிராம் கொக்கைன் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு போலீசார் ஸ்ரீகாந்தை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 14 ஆவது மாஜிஸ்திரேட் தயாளன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்த், “எனது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அவரைக் கவனிக்க வேண்டி உள்ளதால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நான் வெளிநாடு செல்ல மாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்” என்று மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.
இது போதைப்பொருள் வழக்கு என்பதால், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார். அதைதொடர்ந்து, மாஜிஸ்திரேட் தயாளன் நடிகர் ஸ்ரீகாந்தை வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து நேற்று முன்தினம் நள்ளிரவு புழல் சிறையில் அடைத்தனர்.அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதை மருந்துகள் மற்றும் மனநல பொருட்கள் சட்டம் 1985 பிரிவு 8(சி), 22(பி), 29(1) மற்றும் 27 ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் அடிதடி, மோசடி உள்ளிட்ட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இவர் மூலம் தான் கொக்கைன் விற்பனை செய்த பிரதீப் குமார் மற்றும் ஜான் ஆகியோர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தெரியும். பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் போல் பல்வேறு நடிகர் மற்றும் நடிகைளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
பிரசாத் தற்போது, குண்டர் தடுப்புத் சட்டத்தில் புழல் சிறையில் உள்ளார். அவரை ஓரிரு நாளில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் கொக்கைன் விற்பனை செய்ததாக சேலத்தை சேர்ந்த பிரதீப்குமார் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டை சேர்ந்த ஜான் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் 12 மணி நேர விசாரணையில் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது….
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், ‘தீங்கிரை’ படம் தயாரித்து வருகிறார். அந்தப் படத்தில் நான் ஹீரோவாக நடித்துள்ளேன். படப்பிடிப்பு முடிந்தும் எனக்கு ஒப்பந்தப்படி பேசிய பணம் முழுமையாக பிரசாத் தரவில்லை. பிரசாத்திடம் கேட்டால், நான் பினாமி தான். படம் தயாரிப்பது முன்னாள் முதல்வரின் மகன் தான்.நான் அவரிடம் விரைவில் பேசியபடி படம் நடித்ததற்கான பணத்தைக் கொடுப்பதாக பிரசாத் உறுதி அளித்தார்.
அதன்படி என்னை சமாதானப்படுத்த அடிக்கடி பிரசாத் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பாருக்கு அழைத்து பார்ட்டி கொடுப்பார். அப்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக பிரசாத் அழைத்த பார்ட்டியில் கலந்துகொண்டேன். அந்த பார்ட்டியில் எனக்கு அதிகளவு மது கொடுத்தனர். அப்போது நான் பிரசாத்திடம் நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.எனது மனைவி குடித்துவிட்டு வந்தால் திட்டுவார். எனவே வீட்டுக்குச் செல்கிறேன் என்ற கூறினேன். அதற்கு பிரசாத் நீங்கள் மதுபானம் குடிக்க வேண்டாம். அதற்குப் பதில் இதை மூக்கில் இழுத்துக் கொள்ளுங்கள், பிறகு நீங்கள் செல்லலாம் என்று கூறினார். நான் என்ன என்று தெரியாமல் அதை மூக்கில் இழுத்து பயன்படுத்தினேன். அதன்பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மறுநாள் நான் வீட்டில் தான் கண்விழித்தேன்.பிறகு நான் பிரசாத்தைத் தொடர்பு கொண்டு, எனக்கு இரவு என்ன கொடுத்தீர்கள்? மிகவும் நன்றாக இருந்தது. உடல் வலி மற்றும் மனச்சோர்பு எதுவும் இல்லை.காலையில் மிகவும் தெளிவாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு அவர் இன்று மீண்டும் பாருக்கு வாங்க, நான் சொல்கிறேன் என்று கூறினார். அதன்படி பாரில் பிரசாத்தைச் சந்தித்துப் பேசிய போது, கொக்கைன் என்ற போதைப்பொருள் கொடுத்தார். அதைப் பயன்படுத்தினேன். எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் பிரசாத் மூலம் 8 முறைக்கு மேல் கொக்கைன் வாங்கிப் பயன்படுத்தினேன். ஒரு கட்டத்தில் நான் போதைக்கு அடிமையாகிவிட்டேன். என்னால் கொக்கைன் அடிக்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு கைகளும் நடுங்க ஆரம்பித்துவிட்டது.அதன்பிறகு நான் பிரசாத்திடம், எனக்கு கொக்கைன் விற்பனை செய்யும் நபரை அறிமுகம் செய்துவைத்தால் அவர்களிடம் நேரடியாக வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினேன். அதன்படி பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் எனக்கு சேலத்தைச் சேர்ந்த கொக்கைன் ஏஜென்ட் பிரதீப்குமாரை அறிமுகம் செய்து, நம்பிக்கையான நபர். இவர் தான் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கொக்கைன் வழங்கி வருகிறார் என்று கூறினர். அதன்படி, நான் நேரடியாக பிரதீப்குமார் மூலம் கொக்கைன் வாங்கி அதை வீட்டிலேயே வைத்துப் பயன்படுத்தி வந்தேன்.
கொக்கைன் பயன்படுத்தாமல் நான் வெளியே வர முடியாது. அந்த அளவுக்கு கொக்கைன் போதைக்கு அடிமையாகிவிட்டேன். இதில் இருந்து விடுபடமுடியவில்லை. என் மூலம் எனது நெருங்கிய தோழிகளான 2 நடிகைகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு சினிமா பார்ட்டியில் தான் கொடுத்தேன். நன்றாக இருந்ததால் என் மூலம் அவர்கள் கொக்கைன் பயன்படுத்தி வருகின்றனர். என்னுடன் பழகும் நடிகர்களுக்கும் பிரதீப்குமாரை அறிமுகம் செய்து உள்ளேன். அவர்கள் நேரடியாக கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மதுகுடித்தால் வீட்டில் எனது மனைவி கண்டுபிடித்து விடுகிறார். அதனால் எனது மனைவியிடம் இருந்து தப்பிக்க வாசனை வெளியே வராத கொக்கைன் பயன்படுத்தி இன்று நான் போதைக்கு அடிமையாகி உங்கள் முன்பு தலைகுனிந்து நிற்கிறேன். இவ்வாறு ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் கொக்கைன் பயன்படுத்தியதாக 2 பிரபல நடிகைகள் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு நடிகை தற்போது வெளியான திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் ஸ்ரீகாந்த்துடன் நெருங்கிப் பழகி வந்ததால் அவரும் கொக்கைன் பயன்படுத்தி வருகிறார்.
அடுத்து, தமிழ்த் திரையுலகில் ‘மச்சான்ஸ்’ என்று ஆசையாகக் கூறி வாலிபர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நடிகை. இவர் தற்போது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த தொழிலதிபர் சேலத்திற்கு சென்றபோது போலியான ஒன்றிய அரசு முத்திரையை தனது காரில் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்தனர். தற்போது அந்த நடிகை தேசிய கட்சியில் முக்கிய பதவியில் உள்ளார்.
இவர் நடிகர் ஸ்ரீகாந்துடன் நெருங்கிப் பழகி வந்ததால் அவரும் கொக்கைன் பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்த் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் முன்னணியில் உள்ள 2 நடிகைகள் மற்றும் கழுகு திரைப்பட நடிகர் கிருஷ்ணா ஆகியோருக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதனால் திரைப்படத் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


