
ஓவியாவுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ஆரவ்வால் மட்டுமே உண்டானதன்று.
பரணி வெளியேறியபின் அவனுக்காக காயத்ரியிடம் குரல் கொடுக்கப்போய் காயத்ரியால் நேத்து ராத்திரி ஏழர ஸ்டார்ட் பண்ணிட்டா என ஆரம்பிக்கப்பட்டு, நமீதாவால் தூபம் போடப்பட்டு ஜூலியால் வளர்க்கப்பட்டு எல்லோராலும் புரணி பேசப்பட்டதில் அடுத்த பரணியாய் தனிமைப் படுத்தப்பட்டதில் உருவான அழுத்தம் அது.
ஆரவின் அணுக்கத்தில் கிடைத்த ஆசுவாசத்தில் அந்த அழுத்திலிருந்து வெளியேறிவிட முயன்றுகொண்டிருக்கையில் அவனது நெருக்கம் வெறும் எலிமினேஷனிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கானது மட்டுமே என்பது அவன் காயத்ரி முகாமிடம் நாமினேட் ஆகாமலிருக்க தஞ்சமடைந்ததில் தெரியவர, அது உண்மையல்ல என்று நம்பவும் ஆனால் யதார்த்த அனுபூதி அதற்கெதிராகவும் இருப்பதையும் ஏற்க முடியாது, பற்றுக்கோடில்லாத பரிதவிப்பில், முழுகுவது போன்ற நாடகத்தில் முடிந்து, வெளியேறியே ஆகவேண்டும் என்கிற உறுதியான முடிவை எடுப்பதாக முடிந்திருக்கிறது.
தன் காதலையே பிக் பாஸ் கேலி செய்து கேளிக்கையாக்க முனைந்ததும் தன்னை டார்ச்சர் செய்துகொண்டிருக்கும் காயத்ரி சக்தியை வார இறுதிகளில் கமல் கூட, ஜூலியைப் போல நேரடியாகக் கார்னர் செய்யாது செல்லமாகக் குட்டிவிட்டுத் தவிர்க்கிறார் என்பவையெல்லாம் கூட மன அழுத்தத்தைக் கூட வைத்தக் காரணிகள்.
அதற்காக ஆரவ் மீது காதல் வரவே இல்லை என்றோ இவை எல்லாமே மற்றவர்களைப் பழிவாங்க ஓவியா போட்ட நாடகம் என்றோ அர்த்தமில்லை.
மன அழுத்தம் உண்டாகப் பல காரணங்கள் இருப்பதைப் போலவே அது வெளிப்படுவதும் பல வடிவங்களில் இருக்கக்கூடும்.


