
கர்நாடகா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசுக் கட்சியில் இணையவுள்ளனர்.இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வாகியிருக்கிறது.
அதன் விவரம்…
உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக சமஉ சிவராம் ஹெப்பார், கட்சி மேலிடத்தையும், மாநில தலைவர் விஜயேந்திராவையும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்தார்.
இதேபோல பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் சட்டப்பேரவைத் தொகுதி சமஉ எஸ்.டி.சோமசேகரும், பாஜக மாநில தலைமையுடன் மோதலில் ஈடுபட்டார். கர்நாடக பாஜக எடியூரப்பாவின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது என அவர் விமர்சித்தார். இதனால் மாநில தலைவர் விஜயேந்திரா,இந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பாஜக மேலிடத்துக்கு புகார் அளித்தார்.
இதுகுறித்து பாஜகவின் மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் ஓம் பதாக் கூறும்போது,
கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர் ஆகிய இருவரும் கட்சியின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் 6 ஆண்டுகள் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என அறிவித்துள்ளார்.
பாஜகவின் இந்த முடிவுக்கு சம்பந்தப்பட்ட இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர் ஆகிய இருவரும் மிக விரைவில் காங்கிரசில் இணையப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் 2018 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரசுக்குத் திரும்புகின்றனர்.அவர்களாக வெளியேறுமுன்பு நாமாக விலக்கிவிடலாம் என முடிவெடுத்து அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது பாஜக.இந்நிகழ்வு கர்நாடக மாநில பாஜகவுக்கு பின்னடைவு என்று சொல்லப்படுகிறது.


