
இந்திய ஒன்றியத்தில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை வழங்கி சமூக நீதியை உறுதி செய்ய சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கிய தேவையாக உள்ளது. இதன் மூலம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெறும். இடஒதுக்கீடு தொடர்பான சட்டச் சிக்கல்களுக்கும் தீர்வு காண முடியும்.
ஆகவே, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான இராகுல் காந்தி சமீபகாலமாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டுமென கடந்த ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசே நடத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா கூட்டணி கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு இடம் பெற்றுள்ளது. மேலும், பல மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு பாஜக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக மேலிடமும் சாதி வாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கவில்லை.
இந்நிலையில், பீகாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய பாஜக அரசு பணிந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 30,2025) நடந்தது. இதில், அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது….
வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி எப்போதும் மோடி அரசின் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதை நோக்கி அரசு எடுத்து வைக்கும் மேலும் ஒருஅடியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. காங்கிரசும் அதன் முன்னாள் தலைவர் இராகுல் காந்தியும் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து சமீபகாலமாக குரல் கொடுத்தாலும், நீண்டகாலமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை காங்கிரசு எதிர்த்தது என்பதே உண்மை. நாடு சுதந்திரம் அடைந்தத்திற்குப் பிறகு ஒருமுறை கூட சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை.
2010 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தார். பல கட்சிகளின் பரிந்துரை அடிப்படையில், முழுமையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக இல்லாமல், சாதிக் கணக்கெடுப்பு மட்டும் நடத்த காங்கிரசு அரசு முடிவு செய்தது. இதன் மூலம் அவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை அரசியல் ஆதாயத்திற்கான ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்த முயற்சிப்பதை அறியலாம். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 246 இன்படி, மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது, ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக 7 ஆவது அட்டவணையில் 69 ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது. இதில், சில மாநில அரசுகள், அவர்கள் மாநிலத்திற்குள்ளாக சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. இந்த செயல்முறையை சிலர் சரியாகச் செய்திருந்தாலும், சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி உண்மைத் தகவல்களை மறைத்துள்ளனர். வெளிப்படைத் தன்மையில்லாத கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் போது, அதனுடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி நாட்டின் வளர்ச்சியைத் தொடரச் செய்யும். மேலும், கடந்த காலத்தில் இந்த அரசு சமூகத்தின் எந்தப் பிரிவினரையும் பாதிக்காமல், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது போல, சமூகம் மற்றும் நாட்டின் மதிப்புகள் மற்றும் நலன்களைக் காப்பதை உறுதிபூண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம் பாஜக கூட்டணி ஆட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இவ்விவகாரத்தை எழுப்பி கடும் அழுத்தம் தந்து வருகின்றன. இதனால் வேறுவழியின்றி பீகார் தேர்தலை குறிவைத்தே ஒன்றிய பாஜக அரசு சாதிவாரிக் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த பணிந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம், சாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தீவிர எதிர்ப்பு தெரிவிப்பதே பார்ப்பனர்கள்தாம்.மக்கள் தொலையில் சுமார் 3 விழுக்காடு மட்டுமே இருக்கும் அவர்கள் அனைத்துத்துறைகளிலும் சுமார் 90 விழுக்காடு கோலோச்சி வருகின்றனர்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிக்கேற்ற இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பார்ப்பனர் ஆதிக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.இதனால் அவர்கள் இதைத் தீவிரமாக எதிர்த்து வந்தனர்.
இப்போது அவர்களையும் மீறி சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒன்றிய அரசு முன்வந்தது எப்படி?
தமிழ்நாடு பாஜக தலைமையில் பல ஆண்டுகளாக பார்ப்பனர் ஆதிக்கம் இருந்தது.அவர்கள் இருந்தால் கட்சி வளராது என்பதால் அவர்களைப் புறந்தள்ளி பார்ப்பனரல்லாதோர்க்கு முன்னுரிமை கிடைத்துவருகிறது.
அதேபோல்,எல்லாப் பிரிவினரும் விழிப்புணர்வு பெற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்திய ஒன்றியத்தில் எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர் ஆதிக்கமே நீடித்தால் ஆர் எஸ் எஸ் திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாமல் போய்விடும். அதனால் பார்ப்பனர்களைக் கை கழுவிவிட்டு பிற சமூகத்தினரைக் கையில் வைத்துக் கொண்டு தாம் நினைத்ததை நிறைவேற்ற ஆர் எஸ் எஸ் திட்டமிட்டுள்ளது என்றும் அதன்விளைவே கொள்கை அளவில் பாஜக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.


