1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டெ வேகமாக வளர்ந்து வந்த பட்டாளி மக்கள் கட்சி, தற்போது சரிவை நோக்கிச் செல்வதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்த பாமக, மாநிலக் கட்சி அங்கீகாரத்தையும் இழந்தது.
பாமகவில் இருந்த அங்கீகாரம் போனதற்குக் காரணம் கூட்டணி முடிவைத் தவறாக எடுத்துவிட்டதாக அப்போதே அன்புமணி மீது கட்சியினர், மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். 2004 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. வாக்கு சதவீதமும் உயர்ந்தது. ஒன்றிய அமைச்சர் பதவியும் கிடைத்தது.
அதன்பிறகு அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவிற்கு தொடர் சரிவு ஏற்பட்டது.குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 10 இடங்களில் தர்மபுரி தவிர்த்து மற்ற இடங்களில் கட்டுத்தொகை இழந்தது.
மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி ஒப்பந்தத்தின்படி அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை. அதற்குப் பதிலாக சாதாரண ரயில்வே வாரியத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராக பதவி அளிக்கப்பட்டது. இது மேலும் அக்கட்சியினரிடையே வெறுப்பை அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த மாதம் சென்னைக்கு வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அதிமுகவை மிரட்டி கூட்டணியில் சேர்த்ததாகக் கூறப்பட்டது. அதைப்போலவே பாமகவையும் கையோடு கூட்டணியில் சேர்ப்பதற்கு பலவேலைகள் நடத்தப்பட்டதாம். ஆனால் இந்த முறை இராமதாசின் இராஜ தந்திரத்தால் அமித்ஷாவின் கனவு பலிக்காமல் போனது.பாஜக கூட்டணியில் சேரும் அன்புமணியின் முயற்சியை முன்கூட்டியே தெரிந்த இராமதாசு தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி பாஜகவிற்கு செக் வைத்தார்.
இதனால் சில நாட்கள் தந்தை, மகனிடையே வார்த்தை மோதல் நீடித்தது. பின்னர், கட்சியின் மூத்த தலைவர்கள், குடும்பத்தினர் சமாதானம் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இராமதாசு தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டார். தந்தை மகன் மோதலால் கட்சிக்குள் இரு பிரிவாக நிர்வாகிகள், தொண்டர்கள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் பாமகவில் பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில், தந்தை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுச் செல்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டு, பாமக முழுநிலவு மாநாட்டிற்கு பந்தக்கால் நட்டு அதற்கான வேலையைத் தொடங்கினார். மாநாட்டுக்கு அனைவரும் வர வேண்டும் என்று அன்புமணியும், இராமதாசும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்பின், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மாநாட்டை ஒட்டி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி காணொலி பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு இடத்தில் மட்டுமே இராமதாசின் புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில், ‘அண்ணன் அன்புமணி அழைக்கிறார்’ என்று பாடல் தொடங்கியது.
மாநாட்டையொட்டி பாமக நிறுவனர் இராமதாசு, தனியாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புமணியின் படம் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத நிலையில், ‘ஐயா அழைக்கிறார்’ என்றே அந்தப் பாடல் தொடங்குகிறது. இருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி தனித்தனியாக காணொலி வெளியிட்டு இருப்பதால் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் சோர்வடைந்துள்ளனர்.
முழுநிலவு மாநாடு வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று உளமாற விரும்பும் பாமக தொண்டர்கள் இவர்கள் மோதலால் அது நடக்காமல் போயிவ்டுமோ எனத் தவித்து வருகின்றனர்.