
இந்திய ஒன்றியம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்தச் சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
என்ன திருத்தங்கள்?
பழைய சட்டத்தின்படி வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வக்பு தீர்ப்பாயம் மட்டுமே விசாரிக்க முடியும்.தற்போதைய சட்ட திருத்தங்களின்படி வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் வக்பு வாரிய சொத்துகள் குறித்து விசாரணை நடத்த முடியும்.
பழைய சட்டத்தின்படி வக்பு தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. புதிய சட்டத் திருத்தங்களின்படி வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
பழைய சட்டத்தின்படி ஓர் இடத்தில் மசூதி அல்லது முஸ்லிம் அமைப்புகளின் கட்டிடங்கள் இருந்தால் அந்த இடம் தானாகவே வக்பு வாரியத்துக்குச் சொந்தமாகி விடும். புதிய சட்டத் திருத்த மசோதாவின்படி, வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்தால், அந்த இடம் வக்பு வாரியச் சொத்தாகக் கருதப்படாது.
பழைய சட்டத்தின்படி பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்தவர்கள் வக்பு வாரியத்தில் உறுப்பினராக அனுமதி கிடையாது. புதிய சட்ட மசோதாவின்படி 2 பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்த 2 பேர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இணைக்கப்படுவர்.
தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம் அமைக்கவும் வக்பு சட்ட திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
வக்பு வாரிய சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இந்தச் சொத்துகளின் விவரங்கள் மாவட்ட வருவாய்த் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
இவை, எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த 16 பாமஉக்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 பாமஉக்கள் இடம்பெற்றிருந்தனர். கூட்டுக்குழு சார்பில் 30-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடந்த ஜனவரியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம், 655 பக்க அறிக்கையை கூட்டுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை கடந்த பிப்வரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா தொடர்பாக அவையில் 8 மணி நேரம் விவாதம் நடத்தத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதன்பிறகு மசோதா தொடர்பாக அவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக உறுப்பினர்கள் அனைவரும் மக்களவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மக்களவையில் மொத்தம் 543 உறுப்பினர்கள் உள்ளனர். வக்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு 294 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 234 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா எளிதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் மொத்தம் 236 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 121 உறுப்பினர்களும் காங்கிரசுக் கூட்டணிக்கு 85 உறுப்பினர்களும் உள்ளனர். இரு அணிகளைச் சேராத 30 உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற 119 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு இந்தியா கூட்டணி ஒட்டுமொத்தமாக எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது.இரு அணிகளைச் சேராத உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஓரிருவர் மாற்றி வாக்களித்தால் மாநிலங்களவையில் இந்தச் சட்டத்திருத்தம் தோற்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
