எஸ்.பி.வேலுமணி மகன் திருமணத்தில் எல்.முருகனுக்கு அவமதிப்பு – விவரம்

முன்னாள் அமைச்சரும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சமஉவுமான எஸ்.பி. வேலுமணியின் மகன் விகாஷ் – தீக்சனா திருமணம் நேற்று கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தத் திருமண விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன்,கே.பி.அன்பழகன் உட்பட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை.

அதேசமயம், விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.

விழாவுக்கு வந்த அண்ணாமலை அங்கு அமர்ந்திருந்த விருந்தினர்கள் பக்கம் சென்றார். அங்கு செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை அருகில் வந்ததும் அவர்கள் எழுந்து அண்ணாமலையுடன் சிரித்துப் பேசினர்.

மணமக்களை வாழ்த்துவதற்காக மேடைக்குச் சென்ற அண்ணாமலையை எஸ்.பி. வேலுமணி கைகுலுக்கி வரவேற்றார்.

அண்ணாமலை மேடையில் இருந்த போதே எல்.முருகன் மற்றும் தமிழிசை ஆகியோரும் மேடையில் இருந்தனர்.

அவர்களில் முதலில் மணம்க்களுக்கு எல்.முருகன் பூங்கொத்து கொடுத்தார்.அதன்பின் அண்ணாமலை பூங்கொத்து கொடுத்தார்.அண்ணமலை பூங்கொத்து கொடுத்ததும் அவர் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு எஸ்.பி.வேலுமணி பணித்தார்.அவர் சொன்னபடியே அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்ற மணமக்கள் அண்ணாமலைக்கு மிக அருகில் நின்றிருந்த எல்.முருகன் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அதைத் தடுக்கும் விதமாக சற்றுத்தள்ளி நின்றிருந்த தமிழிசை காலில் விழப் பணித்தார் எஸ்.பி.வேலுமணி.மணமக்களும் அவ்வாறே செய்தனர்.

இந்நிகழ்வு மொத்தமும் காணொலியாக வெளியானது.அதைப்பார்த்த பலரும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் எல்.முருகன் காலில் விழுந்து ஆசி பெறுவதை எஸ்.பி.வேலுமணி தடுத்துவிட்டார் என்றும் ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் சாதியப்பாகுபாடு காரணமாக அவர் அவமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துச் சொல்லி வருகின்றனர்.

Leave a Response